Advertisment

மக்கள் வாழாத ஊரில் கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

ghj

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசியார்பட்டியில் 3000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Advertisment

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி சத்திரப்பட்டி சாலையின் மேற்குப்பகுதியில் பேச்சிலாக் கிராமமான (மக்கள் வாழாத ஊர்) அரசியார்பட்டி பகுதியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார், க.துள்ளுக்குட்டி, சி.பிரகதீஸ்வர், சி.பொன்ரமணன் ஆகியோர் கள ஆய்வு செய்தபோது, புதுக்குளம் கண்மாய் தென்கலுங்கு அருகில் கல்திட்டை, முதுமக்கள் தாழிகள், குத்துக்கல் ஆகிய பெருங்கற்கால நினைவுச் சின்னங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, " பெரிய கற்களைக் கொண்டு இறந்தவர்களின் நினைவாக ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டதால் இக்காலம் பெருங்கற்காலம் எனப்படுகிறது. இக்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவார்கள். அதை விலங்கு பறவைகள் இரையாய் கொண்டபின் இருக்கும் எலும்புகளைச் சேகரித்து, அதோடு ஈமப்பொருட்களையும் தாழியில் வைத்து அடக்கம் செய்வார்கள். இதைச் சுற்றி கற்களைக் கொண்டு கல்திட்டை, கற்பதுக்கை, கல்குவை, கல்வட்டம், குத்துக்கல் உள்ளிட்டவற்றை அமைப்பர்.

jlk

அரசியார்பட்டியில் செம்மண் நிலத்தின் மேற்பரப்பில் அருகருகே புதைந்தநிலையில் சிறிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் உள்ளன. இதில் ஒரு தாழியின் வாய்ப்பகுதியின் விட்டம் 43 செ.மீ. ஆகும். மேற்பகுதி அரைவட்டமாக உள்ள, 1 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சில பலகைக்கற்கள், தாழிகள் இருக்கும் பகுதியில், தனித்தனியாகக் காணப்படுகின்றன. இவை சேதமடைந்த கல்திட்டையின் எஞ்சிய கற்கள் ஆகும். தாழிகள் புதைக்கப்பட்ட தரையின் மேற்பகுதியில், பலகைக்கற்களால் சதுரம் அல்லது செவ்வகவடிவில் நான்கு புறங்களிலும் சுவர்போல் அமைத்து அதன்மேல் கற்பலகையைக் கொண்டு மூடி உருவாக்கப்படுவது கல்திட்டை ஆகும். இதன்மூலம் இங்குக் கல்திட்டைகள் இருந்ததை அறிய முடிகிறது. மேலும் 3 மீட்டர் உயரமுள்ள ஒரு குத்துக்கல் ஒன்றும் கீழே சாய்ந்த நிலையில் கிடக்கிறது.

Advertisment

இப்பகுதி சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மேற்பரப்பிலும், பாறைகளிலும் இரும்புத் தாதுக்கள் காணப்படுகின்றன. கெப்பாரிஸ் டெஸிடியூ (Capparis decidua) எனும் தாவரவியல் பெயர் கொண்ட குழல் ஆதண்டை என்ற ஒரு மூலிகைத் தாவரமும் இங்கு வளர்ந்து வருகிறது. பெருங்கற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனைப் பயன்படுத்தி வந்துள்ளதால் இதை இரும்புக்காலம் எனவும் அழைப்பர். தமிழ்நாட்டில் பெருங்கற்காலம் கி.மு.1000 முதல் கி.மு.300 வரையிலானது. இவை சுமார் 3000 ஆண்டுகள் பழமையானவை. விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய சமவெளிப்பகுதிகளில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வணிகப் பாதைகளை ஒட்டியே காணப்படுகின்றன" என்றார்.

pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe