Skip to main content

மக்கள் வாழாத ஊரில் கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

ghj

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசியார்பட்டியில் 3000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி சத்திரப்பட்டி சாலையின் மேற்குப்பகுதியில் பேச்சிலாக் கிராமமான (மக்கள் வாழாத ஊர்) அரசியார்பட்டி பகுதியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார், க.துள்ளுக்குட்டி, சி.பிரகதீஸ்வர், சி.பொன்ரமணன் ஆகியோர் கள ஆய்வு செய்தபோது, புதுக்குளம் கண்மாய் தென்கலுங்கு அருகில் கல்திட்டை, முதுமக்கள் தாழிகள், குத்துக்கல் ஆகிய பெருங்கற்கால நினைவுச் சின்னங்களைக் கண்டுபிடித்துள்ளனர். 

 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, " பெரிய கற்களைக் கொண்டு இறந்தவர்களின் நினைவாக ஈமச்சின்னங்கள்  அமைக்கப்பட்டதால் இக்காலம் பெருங்கற்காலம் எனப்படுகிறது. இக்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவார்கள். அதை விலங்கு பறவைகள் இரையாய் கொண்டபின் இருக்கும் எலும்புகளைச் சேகரித்து, அதோடு ஈமப்பொருட்களையும் தாழியில்  வைத்து அடக்கம் செய்வார்கள். இதைச் சுற்றி கற்களைக் கொண்டு கல்திட்டை, கற்பதுக்கை, கல்குவை, கல்வட்டம், குத்துக்கல் உள்ளிட்டவற்றை  அமைப்பர். 

 

jlk

 

அரசியார்பட்டியில் செம்மண் நிலத்தின் மேற்பரப்பில் அருகருகே புதைந்தநிலையில் சிறிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் உள்ளன. இதில் ஒரு தாழியின் வாய்ப்பகுதியின் விட்டம் 43 செ.மீ. ஆகும். மேற்பகுதி அரைவட்டமாக உள்ள, 1 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சில பலகைக்கற்கள், தாழிகள் இருக்கும் பகுதியில், தனித்தனியாகக் காணப்படுகின்றன. இவை சேதமடைந்த கல்திட்டையின் எஞ்சிய கற்கள் ஆகும். தாழிகள் புதைக்கப்பட்ட தரையின் மேற்பகுதியில், பலகைக்கற்களால் சதுரம் அல்லது செவ்வகவடிவில் நான்கு புறங்களிலும் சுவர்போல் அமைத்து அதன்மேல் கற்பலகையைக் கொண்டு மூடி உருவாக்கப்படுவது கல்திட்டை ஆகும்.  இதன்மூலம் இங்குக் கல்திட்டைகள் இருந்ததை அறிய முடிகிறது. மேலும் 3 மீட்டர்  உயரமுள்ள ஒரு குத்துக்கல் ஒன்றும் கீழே சாய்ந்த நிலையில் கிடக்கிறது. 

 

இப்பகுதி சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மேற்பரப்பிலும், பாறைகளிலும் இரும்புத் தாதுக்கள் காணப்படுகின்றன. கெப்பாரிஸ் டெஸிடியூ (Capparis decidua) எனும் தாவரவியல் பெயர் கொண்ட குழல் ஆதண்டை என்ற ஒரு மூலிகைத் தாவரமும் இங்கு வளர்ந்து வருகிறது.  பெருங்கற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனைப் பயன்படுத்தி வந்துள்ளதால் இதை இரும்புக்காலம் எனவும் அழைப்பர். தமிழ்நாட்டில் பெருங்கற்காலம் கி.மு.1000 முதல் கி.மு.300 வரையிலானது. இவை சுமார் 3000 ஆண்டுகள் பழமையானவை. விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய சமவெளிப்பகுதிகளில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வணிகப் பாதைகளை ஒட்டியே காணப்படுகின்றன" என்றார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.