Discovery of 8 unexploded rocket launchers - Bomb experts research

Advertisment

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது விடுபட்டுச் சென்ற வெடிக்காத 8 ராக்கெட் லாஞ்சர்கள் வனப்பகுதியில் கண்டெடுத்து தற்காலிக பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ளவீரமலைப்பாளையம் வனப்பகுதியில் துணை ராணுவப்படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் ராக்கெட் லாஞ்சர் கையாளும் பயிற்சியில் வருடந்தோறும் ஈடுபடுவது வழக்கம்.

கடந்த ஆண்டு 4 பிரிவுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், சிலர் வெடித்த, வெடிக்காத தோட்டக்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் குறித்த கணக்கினை வனத்துறை மற்றும் காவல்துறையினரிடம் சமர்ப்பிக்கவில்லையாம். இதுகுறித்து வையம்பட்டி போலீஸார் விசாரித்துவரும் நிலையில், கணக்கில் வராத மிஸ் ப்ஃயர் என்னும் வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்களைத் தேடிவந்துள்ளனர்.

இந்நிலையில், தோகைமலை காவல் சரகத்திற்குட்பட்ட கருங்கல்பட்டி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு லாஞ்சரும், மணப்பாறை காவல் சரகத்திற்குட்பட்ட மத்தகோடங்கிபட்டி கிராமத்தில் ஒரு லாஞ்சரும் இருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், செவ்வாய்க்கிழமை திருச்சி வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது கருங்கல்பட்டியில் மேலும் ஒரு லாஞ்சரும், பூசாரிப்பட்டி பகுதியில் 5 லாஞ்சர்களும் கிடைக்கப்பெற்றன. அதனைத் தொடர்ந்து 8 ராக்கெட் லாஞ்சர்களையும் வனப்பகுதியிலேயே குழித்தோண்டி தற்காலிக பாதுக்காப்பிற்கு புதைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ராக்கெட் லாஞ்சர்கள் எந்தெந்த இராணுவப்பிரிவுகளுக்கு உரியது என விசாரணை நடைபெற்று, பின் நீதிமன்ற அனுமதியுடன் பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.

2017இல் குடியிருப்பு பகுதியில் ராக்கெட் லாஞ்சர் வெடித்த சம்பவத்திற்குப் பிறகு, இராணுவத்தினரால் விடுபட்டுச் சென்ற வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் மணப்பாறை பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.