ADVERTISEMENT

கி.பி.10ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐயனார் சிலை கண்டெடுப்பு..! 

05:19 PM Aug 13, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், அவலூர்பேட்டை சாலையில் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காட்டுவாநத்தம் கிராமத்தில் அவ்வூரைச் சேர்ந்த பவுன்குமார் அளித்தத் தகவலின் பெயரில் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் வினோத் இணைந்து அவ்வூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள வேடியப்பன் கோவிலில் ஆய்வு செய்தனர். அங்கு சுமார் மூன்றடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்ட கற்பலகையில் கையில் செண்டு ஏந்திய நிலையில் ஐயனார் புடைப்பு சிற்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஊர்மக்கள் இந்த ஐயனாரை வேடியப்பன் என்ற பெயரில் வழிபட்டு வந்துள்ளனர்.

பரந்துவிரியும் விரிசடையுடன் வட்ட முகமும் இரு காதுகளிலும் பத்ர குண்டலமும் அணிந்து தடித்த உதட்டுடன் சுகாசன கோலத்தில் இடது காலை பீடத்தில் அமர்த்தியும் வலது காலை கீழே தொங்கவிட்டும் அமர்ந்துள்ளார். வலது கையில் கடக முத்திரையில் செண்டை ஆயுதமாகவும் இடது கையை தனது தொடையின் மீது வைத்தும் காட்சி தருகிறார். கழுத்தில் கண்டிகை, சவடி ஆகிய அணிகலன்களுடன் முப்புரி நூலும் கைகளில் கைவலையும் அணிந்து கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

இவரின் மனைவிகளான பூர்ணாவும் புஷ்கலாவும் வலமும் இடமும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். இருவரும் கரண்ட மகுடம் தரித்து காதுகளில் பத்ர குண்டலங்களுடன் தத்தமது ஆயுதங்களுடன் காட்சி தருகின்றனர்.

ஐயனாரின் பாதத்தின் அருகே வேடன் ஒருவன் வேட்டையாடும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. நீண்ட தாடியுடன் தொடை வரை உடையணிந்த வேடன் ஒரு கையில் வில்லும் மற்றொரு கையில் அம்பும் தாங்கிக் கொண்டு நிற்க, வேட்டை நாய் ஒன்று இரு மான்களைத் துரத்துவது போல அழகாகக் காட்டப்பட்டுள்ளது. ஒரு மான் பயந்து பின்னோக்கி ஓட மற்றொரு மான் நாயின் வாயில் அகப்பட்டு அதன் தலை மட்டும் திரும்பிய நிலையில் அழகாகக் காட்சி படுத்தப்பட்டுள்ளது. ஐயனாரின் வாகனமான யானை இடப்பக்க தோள் அருகே அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ள அணிகலன்கள் மற்றும் வேட்டை காட்சிகளை எல்லாம் கருத்தில் கொண்டு இச்சிற்ப அமைதியை வைத்து இந்த ஐயனார் சிற்பம் கி.பி 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்தியது என்று கூறலாம். இவ்வளவு அழகான ஆயிரம் வருட ஐயனார் சிலை ஆள் அரவம் அற்ற ஏரிக்கரையின் அமைதியில் அருள்பாலிக்கிறார்.

மேலும் இவ்விடத்திற்கு அருகே புதருக்குள் சிலை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மேலும் ஆய்வு செய்ததில் அச்சிற்பம் கி.பி. 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால விஷ்ணு சிற்பம் என்று கண்டறியப்பட்டது. சுமார் 4 அடி உயரமுள்ள இச்சிலை வழிபாடின்றி கைவிடப்பட்டதால் முகம் மற்றும் உடல் பகுதி மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இதனை முறையாக அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்திட அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT