சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார். 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisment

உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என்று தெரிவித்ததோடு மறுபிறவி குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது எனவும் பேசியுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளம்பியுள்ளது.

Advertisment

மறுபிறவி குறித்து பேசுவது; ஆன்மீகம் குறித்து பேசுவது பள்ளி மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு எதிர்ப்புகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, புகார் பள்ளிக்கல்வித்துறையினுடைய உயரதிகாரிகளுக்கு சென்ற நிலையில், தமிழக அரசினுடைய கவனத்திற்கும் சென்றது.

சென்னையில் அசோக் நகர் பள்ளிக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்திருந்தார். அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் இதுகுறித்து எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாத அளவிற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குக் காரணம் யாராக இருந்தாலும் சரி இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நாங்கள் எடுக்கப்படும் நடவடிக்கை தமிழகம் முழுமைக்குமான ஒட்டுமொத்த பாடமாக இருக்கும்' என தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் சைதாப்பேட்டை மாடல் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் ஆர் எஸ் எஸ் பிரச்சாரம் செய்ததையும், சனாதன, ஆபாச கருத்துக்களை பேசி மூடநம்பிக்கைகளை விதைப்பதோடு, மாற்றுத்திறனாளிகளை அவமதித்தை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சைதை மாந்தோப்பு பள்ளி முன்பு கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் அசோக் நகர் காவல் நிலையத்திலும் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றவர்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக சிபிஎம் கட்சியைச் சார்ந்த வில்சன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். மகாவிஷ்ணு நடத்தும் 'பரம்பொருள்' அறக்கட்டளை அமைந்துள்ள திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியிலும் தற்பொழுது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படங்கள்: எஸ்.பி.சுந்தர்