
தமிழக - ஆந்திரா எல்லையில் உள்ள தடுப்பணை அதன் கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறுகிறது.
கடந்த 3 நாட்களாக தமிழக - ஆந்திரா எல்லையில் உள்ள வனப்பகுதிகளிலும், பாலாறு நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை முழுவதும் நிரம்பி அதன் கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி தமிழக பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் மழை நீடித்தால் தடுப்பணையில் இருந்து உபரி நீரானது அதிகமாக வெளியேறும். மேலும் அம்பலூர், கொடையாஞ்சி, அவரங்குப்பம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்து நிலத்தடி நீர் பெருகி விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெற ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் 5 அடி உயரம் இருந்த புல்லூர் தடுப்பணையை ஆந்திரா அரசு 12 அடி உயரமாக உயர்த்திக் கட்டாமல் இருந்திருந்தால் தமிழக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கூடுதலாக நீர் வரத்து இருக்கும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.