Skip to main content

‘ஆன்மீக பக்தர்களுக்கு பேரிழப்பாகும்’ - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

 'Disaster for spiritual devotees' - Edappadi Palaniswami obituary

 

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கிப் புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார். வயது 82. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில் அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த வேல்முருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமகவின் ராமதாஸ், அமமுகவின் டி.டி.வி. தினகரன், பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பங்காரு அடிகளாரின் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவு செய்தி அறிந்து வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி அரை நூற்றாண்டுக்கு மேல் சிறப்பாக நடத்தி கல்வி, மருத்துவ சேவைகளை வழங்கியவர். ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்தும் புரட்சிகரமான நடைமுறையைப் பழக்கப்படுத்தினார். பங்காரு அடிகளாரின் சேவையைப் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறும்' எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், 'பங்காரு அடிகளார் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். பங்காரு அடிகளார் மறைவு ஆன்மீக பக்தர்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்