
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடியில் இன்று காலை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, ராஜகண்ணப்பன், சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மத்திய அரசால் கொடுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. இதுவரை மத்திய அரசிடம் இருந்து நிதி உடனே கிடைக்கும். ஆனால் இந்த மழை வெள்ளத்திற்கு இதுவரையில் நிதி எதுவும் அறிவிக்கவில்லையே எனச் செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், “மத்திய அரசின் நிதிப் பங்களிப்பைப் பற்றி விளக்கம் சொல்கிறேன். இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதி என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்திற்கு ஒருமுறை மத்திய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு தீர்மானிக்கிறது.
அதன்படி, தமிழ்நாட்டினுடைய மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது 900 கோடி ரூபாயை மத்திய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது 300 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஏற்றிடவேண்டும். மத்திய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் அளிக்கப்படும். ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த மாநிலப் பேரிடர் நிவாரண நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்றுதான் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இதைத்தான் நானும் பிரதமரை நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தி குறிப்பிட்டிருக்கிறேன். மனுவாகவும் கொடுத்திருக்கிறேன். ஆனால் இன்றுவரை இந்த இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை. தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மத்திய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல.

சவாலான நிதிநிலைச் சூழல் இருக்கும் போதிலும், மத்திய அரசு இந்தக் கூடுதல் நிதி தராத போதிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு நிதியைச் செலவிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். சென்னையில் நிவாரண உதவிக்கும் மீட்புப் பணிகளுக்கும் 1500 கோடி ரூபாய்க்குக் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. நான் இன்று இங்கு அறிவித்துள்ள நிவாரண உதவிகளுக்கும், பணிகளுக்கும் 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள், குடிநீர்த் திட்டங்கள், மருத்துவமனைகள், பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை சீரமைப்பதற்கும் பெரும் நிதி தேவைப்படும்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அதே நேரத்தில், இந்த வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பாக சாலைகள், மருத்துவமனைகள், பாலங்கள், மின் கட்டமைப்புகள் ஆகியவற்றை சீர்செய்யும் பணிக்காக தமிழ்நாடு அரசு உடனடி முன்பணமாக மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 250 கோடி ரூபாயை விடுவிக்க ஆணையிட்டுள்ளேன். அதோடு மேலும் தாமதமின்றி இந்த இரண்டு பேரிடர்களையும் கடும் பேரிடர்களாக அறிவித்து மத்திய அரசு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கோரப்பட்டுள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் சார்பிலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.