சிவகங்கையில் காலாவதியான கப் நூடுல்ஸ் சாப்பிட்ட இருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள ஆப்பிள் எனப் பெயர் கொண்ட சூப்பர் மார்க்கெட் ஒன்றில் காலாவதியான நூடுல்ஸ் விற்கப்படுவதாக புகார் வெளியானது. இந்த சம்பவத்தின் பின்னணியில் புதூர் பகுதியைச் சேர்ந்த சந்தானராஜன் என்பவரின் மகன் ருத்ரபிரியன், சுஜித் மண்டல் என்பவரின் மகள் அகான்ஸா மண்டல் ஆகியோர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் கப் நூடுல்ஸை 166 ரூபாய் பணம் கொடுத்து வாங்கி உள்ளனர்.
வீட்டுக்கு எடுத்துச் சென்றவர்கள் அதனைச் சாப்பிட்ட பொழுது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நூடுல்ஸ் டப்பாவை சோதனை செய்ததில் அது கடந்த எட்டாம் மாதமே காலாவதியானது தெரியவந்தது. காலாவதியான பொருட்களை விற்ற கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தது. இதையடுத்து அந்த தனியார் பல்பொருள் அங்காடி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.