/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20210726_155040.jpg)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் விளந்திடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியபிரியா(24). இவர் கடந்த 2018-ல் டிஎன்பிஎஸ்சி மூலம் கிராம நிர்வாக அலுவலராகத் தேர்வு பெற்றார். கலந்தாய்வில் இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வாக்கூர் தச்சூர் கிராமத்தில் பணியமர்த்தப்பட்டார். டிஎன்பிஎஸ்சி மூலம் பணிக்கு வந்தவர்களுக்கு ஓராண்டில் பணி வரன்முறை செய்யவேண்டும். இவருடன் பணிக்கு வந்தவர்களுக்கு பணிவரன்முறை செய்யப்பட்டது. "இவர் 75 சதவீத கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி, இவர் எப்படி பணி செய்வார்" என்று கருதி கடந்த 2 வருடத்திற்கு மேலாகியும் பணி வரன்முறை செய்யவில்லை. இதுகுறித்து கடந்த 1 வருடத்திற்கு முன் அப்போது பணியில் இருந்த சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் காவியபிரியா. அப்போது, "தங்களை இந்த பணிக்கு வைத்துக்கொள்ளலாமா? என்று வருவாய்த்துறை தலைமை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபிறகு தான் பணிவரன்முறை செய்ய முடியும்" என்று கூறியுள்ளார். அதன் பிறகு அவர் பணி மாறுதல் பெற்றுச் சென்ற நிலையில், இதுகுறித்து எந்த விளக்கமும் தெரியவில்லை. அதன்பின்னர் கரோனாவால் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் கடந்த 2 வாரத்திற்கு முன் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனிடம் மனு கொடுத்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உடனடியாக டிஎன்பிஎஸ்சி-க்கும், வருவாய்த்துறை தலைமையகத்துக்கும் பணிவரன்முறை செய்யாமல் இருப்பது குறித்தும் அந்த பெண்ணின் நிலைமையைக் கூறி, விளக்கம் கேட்டுள்ளார். "அவரின் சூழலுக்கு ஏற்ப அலுவலகம் உள்ளிட்ட எந்த பணிக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள், உடனடியாக பணிவரன்முறை செய்துகொடுக்கவேண்டும்" என்று பதில் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு பணிவரன்முறை செய்த ஆணையை ஜூலை 26-ந்தேதி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வழங்கப்பட்டது.
''கடந்த 2 ஆண்டுகளாக பணிவரன்முறை செய்யாமல் இருந்ததால் எனது சொந்த மாவட்டத்திற்கு இருவழி மார்க்க பணிமாறுதலுக்குச் செல்லமுடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதுகுறித்து மிகவும் வேதனையுடன் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து மனு அளித்தேன். அவர் 10 நாட்களுக்குள் சரியான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஆணையை வழங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கண்ணீர் மல்க நன்றியைத் தமிழக அரசிற்கும் சார் ஆட்சியருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார் காவியபிரியா.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)