Director Seenu Ramasamy  request Mr M.K. Stalin to make cinema education

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதன் காரணமாக திமுகவின் கூட்டணி கட்சிகளும், திமுகவினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓராண்டு நிறைவை தனது நன்மைகளால் பண்பின் தன்மையினால் நிறைவு செய்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேசிக்கிறேன். இரண்டு கோரிக்கைகள் இதயத்தில் உண்டு சினிமா ரசனை கல்வியை நமது பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். எது உண்மையான சினிமா கலை அதை எப்படி பார்க்க வேண்டுமென மாணவ பருவத்தில் அவர்களுக்கு கற்றுத் தருதல், உலகின் தலைசிறந்த படங்களின் வழியே பாடப்பிரிவுகள் உண்டாக்க வேண்டும். இது சினிமா தொழில் நுட்பக்கல்வி அல்ல.

Advertisment

ரசனையை மேம்படுத்தும் கல்வி இக்கோரிக்கையை ஆசான் பாலுமகேந்திரா கலைஞரிடம் முன்வைத்தார். அதையே அவர் புதல்வர் முதல்வரிடம் முன்வைத்தேன். கர்நாடகா போல தேசிய விருது பெற்ற சினிமா கலைஞர்களுக்கு ஒரு வீடு அரசு வழங்க வேண்டும்.

அது சென்னையில் கூட அல்ல ஏனெனில் இங்கு விலை அதிகம் அரசுக்கு கூடுதல் செலவு. அவர்கள் பிறந்த மாவட்டத்தில் தந்தால் மகிழ்வேன். இவ்விரு கோரிக்கைகள் முதல்வரின் கரங்களில் சேர்ப்பிக்கிறேன். சினிமா ரசனை கல்வியை (Film Appreciation) மாணவ மாணவியரின் பாடப்பிரிவில் இலக்கியம், இலக்கணம், ஓவியம், போல வெகுமக்களை ஆட்கொண்ட சினிமாவையும் சேர்க்க வேண்டுமென கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், பாடநூல் பிரிவின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் கவனத்திற்கு இணைக்கிறேன். சினிமா ரசனை கல்வியின் மூலம் ஒரு தலைமுறை பயன் பெறுமேயானால் திரைக்கலைஞர்களுக்கு காவடி தூக்கும் பக்தர்களாக, கட்-அவுட்களுக்கு பாலபிசேகம் செய்யும் பைத்தியம் தெளிந்து விசிலடிச்சான் குஞ்சுகள் எனும் போக்கு மாறி இளைய சமுதாயம் விமர்சனப் பூர்வமாக நிதர்சனமான சினிமாவை ரசிக்கும் இனமாக மாறும்.” என்று பதிவிட்டுள்ளார்.