“உங்களலாம் விட்டுட்டு எப்படி நான் நிம்மதியா போவேன்..” என்றார்! - சீமான் குறித்து இயக்குநர் சரவணன் நெகிழ்ச்சிப் பதிவு! 

Director R Saravanan about seeman

சென்னை, திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, சீமானுக்கு அக்கட்சியின் தொண்டர்கள் முதலுதவி அளித்தனர். பின்னர், அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களின் இயக்குநர் இரா.சரவணன், சீமான் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியாகபதிவிட்டுள்ளார்.

Director R Saravanan about seeman

அவர் பதிவிட்டிருப்பதாவது; ‘போன் விஷயத்தில் எப்போதுமே நான் பூஜ்ஜியம். சில நாட்களாக அண்ணன் சீமான் போன் செய்தபோதும், எடுக்க முடியாத சூழல். “தம்பி, இது என்னடா கெட்ட பழக்கம்? அவசரமான செய்திக்குத்தானே அழைக்கிறேன்...” எனக் குரல் பதிவு அனுப்பி இருந்தார்.

நேற்று அண்ணன் மயங்கி விழுந்த செய்தியைக் கேட்டதும், குலை நடுங்கி விட்டது. வெயிலில் நின்று கொண்டிருந்த அண்ணன், அப்படியே சரிந்துவிழும் அந்த வீடியோவைப் பார்த்தபோது துடித்துப் போனேன். தற்சோர்வு அடையா தலைவனாக மறுபடியும் போராட்டம், ஆர்ப்பாட்டம் எனக் களத்தில் நிற்பார்.

“இந்தளவுக்குக் கத்துற நான், ஒரு நாள் செத்துப் போவேன். அப்போதான் என் அருமை உங்களுக்குத் தெரியும்” என அண்ணன் முன்பு பேசிய பேச்செல்லாம் மனதுக்குள் வந்துபோக, ஓடோடிப்போய் அண்ணனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அண்ணன் வெளியே வந்த சில நிமிடங்களில் பேசினார். “தம்பி...” என அவர் சொன்ன கணமே உடைந்தழுதேன்.

“ஒண்ணும் இல்ல... சின்ன மயக்கம்தான் தம்பி...” என்றார். “எப்பவுமே எதுக்கும் மயங்க மாட்டேன்னு சொல்வீங்களே?” என்றேன். சத்தம் போட்டுச் சிரித்தார். தைரியமூட்டினார். “உங்களை எல்லாம் இவ்வளவு பிரச்சனைகளோட விட்டுட்டு, நான் எப்பட்றா நிம்மதியா போக முடியும்?” என்றாரே பார்க்கலாம்... அதான் அண்ணன்.’ இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ntk seeman
இதையும் படியுங்கள்
Subscribe