Skip to main content

தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும், மாணவர்களும்  மீட்பு பணிக்கு வர வேண்டும்- இயக்குநர் கௌதமன் பேட்டி

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
g

  

 கீரமங்கலம், சேந்தன்குடி, நெடுவாசல் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இயக்குநர் கௌதமன் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகளை செய்ய உடனே வர வேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பால் பல லட்சம் மரங்கள் ஒடிந்து வீடுகள், கடைகள், இழந்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் பகுதியில் 4 நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 


    இந்த நிலையில் கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிக்கு அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ யாரும் வந்து பார்க்கவில்லை என்று குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
    இந்த நிலையில் இயக்குநர் கௌதமன் கீரமங்கலம் சேந்தன்குடி, நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று விவசாயிகளிடம் கேட்டறிந்தார். 


    பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது,   புதுக்கோட்டை மாவட்டம் மரம் தங்கச்சாமியால் மரங்கள் வளர்க்கப்பட்ட மாவட்டம். அவரால் செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளது. இன்று அந்த மரங்கள் ஒடிந்து சாய்ந்துவிட்டது. தமிழகம் முழுவதும் பல கோடி மரங்கள்  சாய்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது. இனி இந்த மரங்களை வளர்க்கவும், இந்த அவலத்தில் இருந்து மீளவும் சுமார் 20 ஆண்டுகள் ஆகும். இத்தனை பெரிய இழப்பு எற்பட்டுள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள் யாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவில்லை. நிவாரணப்பணிகளும் நடக்கவில்லை.


    பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் இன்னும் அது பற்றி பேசக் கூட இல்லை. உடனடியாக துணை ராணுவத்தை அனுப்பி மீட்பு பணிகளை செய்ய வேண்டும். மேலும் தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து மத்திய அரசின் நிவாரணம் வழங்க வேண்டும்.   

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், வடகாடு, நெடுவாசல், கொத்தமங்கலம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் தென்னை, பலா, தேக்கு, போன்ற மரங்கள் முற்றிலும் அழிந்துள்ளது. பல பகுதிகளில் அரசு நிவாரணமாக சோறு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறன்றனர். மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு சிமெண்ட் ஆலைக்கு எதிராக தொடரும் போராட்டங்கள்...

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

Continuing demands to the government cement plant ...

 

 

அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை சுமார் 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான சுண்ணாம்பு கல், தோண்டி எடுப்பதற்காக கடந்த 1982ஆம் ஆண்டு வாக்கில் ஆனந்தவாடி கிராமத்தில் சுமார் 161 விவசாயிகளிடமிருந்து 270 ஏக்கர் விளை நிலத்தை கையகப்படுத்தியது அரசு. அப்போது நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 2,500 ரூபாய் நஷ்ட ஈடாகவும், நிலம் கொடுத்த விவசாயிகளின் வீட்டில் உள்ள ஒருவருக்கு சிமெண்ட் ஆலையில் நிரந்தர வேலை கொடுப்பதாக உறுதி அளித்தனர். 
 


ஆனால், 37 ஆண்டுகள் ஆகியும் அரசு அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிபடி வேலை கொடுக்கவில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, காற்றில் பறக்கவிட்டனர் எனக் கூறி நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் அந்தக் கிராம மக்கள் அவ்வப்போது போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்தனர். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கடும் போராட்டத்தில் இறங்கினர். அப்போது அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

 

அந்த பேச்சுவார்த்தையின்போது நிரந்தரப் பணி வழங்க முடியாது. ஆனால், நிலம் கொடுத்த 57 குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பணி வழங்கப்படும் என்று கூறி, அதன்படி ஒப்பந்த தொழிலாளர்களாக பணி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளியூர்களில் இருந்து 40 பேர்களை நிரந்தர தொழிலாளர்களாக வேலைக்காக ஆட்களை எடுத்துள்ளனர். ஆனால் நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர பணி இல்லை. வெளியில் இருந்து குறுக்கு வழியில் நிரந்தர வேலைக்கு ஆட்களை அனுப்புவது ஏன், ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைப்பதா என்று கோபமடைந்த ஆனந்தவாடி விவசாய மக்கள் கடந்த 30ஆம் தேதி தமிழ் பேரரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் திரைப்பட இயக்குனர் கௌதமன் தலைமையில் நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அங்குள்ள சுண்ணாம்பு கல் சுரங்கத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

நிரந்தரமான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அறிவித்தனர். இதையடுத்து அரியலூர் காவல்துறை ஏ.டி.எஸ்.பி. திருமேனி, தலைமையில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. தேவராஜ் உட்பட ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர். அப்போது ஏ.டி.எஸ்.பி. திருமேனி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை ஆகியோர் போராட்டத்திற்கு தலைமையேற்ற இயக்குனர் கௌதமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

அப்போது அவர், நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிரந்தர வேலை அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார். தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் கவனத்திற்கு போராட்டம் குறித்து அதிகாரிகள் தகவல் அளித்தனர். உடனே அமைச்சர் சம்பத், செல்ஃபோன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமைச்சர் வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

 

 

Next Story

"என்.எல்.சி யில் வெடித்தது கொதிகலனா? கொலைக்கலனா?"- கௌதமன் ஆவேசம்! 

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

nlc

 

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து உயிர்ப்பலி நடந்ததைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுளார் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கெளதமன். அதில், "இந்திய ஒன்றிய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையமான நெய்வேலி என்.எல்.சியில் ஏற்பட்டு வரும் தொடர் உயிர்ப்பலிகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. 

 

கடந்த மே மாதம் 7 உயிர்களைப் பலி வாங்கிய அதே இடத்தில் இப்போது (01.07.2020) கொதிகலன் வெடித்ததில் 7 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் ஒரு நிரந்தரத் தொழிலாளர் உட்பட 8 பேர் உயிரிழந்ததோடு 12 பேர் பலத்த காயங்களுடனும் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நவரத்னா சிறப்பைப் பெற்ற இந்த இந்திய ஒன்றிய நிறுவனம், கவனக் குறைவாகச் செயல்பட்டு தொடர்ந்து தமிழர்களின் உயிருடன் விளையாடி வருவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

 

பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைப் பிய்த்தெறிந்து, நூற்றுக்கணக்கான கிராமங்களைத் தின்று செரித்துதான் இன்று என்.எல்.சி எனும் எமன் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்து மக்களின் வாழ்வியலைச் சூறையாடிவிட்டு நின்று கொண்டிருக்கிறது. 

 

V. Gowthaman

 

காவேரியில் தண்ணீர் தர மறுத்தபோது, எங்கள் மண்ணிலிருந்து மின்சாரத்தைத் தர மாட்டோம் எனக் கூறுவதற்கு அஞ்சிய தமிழக ஆட்சியாளர்கள் எம் மக்களின் உயிரை மட்டும் கொத்துக்கொத்தாய் கொதிகலன் வெடித்துக் கொன்று வீசப்படுவதை வேடிக்கை பார்ப்பது எப்படி நியாயமாகும்? எங்கள் நிலத்தையும் கொடுத்து உயிரையும் கொடுத்து எங்கள் மக்களை அநாதைகளாக்கவா இந்திய அரசும் தமிழக அரசும் கைகோர்த்து விளையாடுகின்றன?. இறந்த ஒவ்வொரு உயிருக்கும் தமிழக அரசு மூன்று லட்சம் நிவாரணம் அறிவித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

 

படித்த பள்ளிக்கூடம், குளித்த குளம், கும்பிட்ட கோயில், குடியிருந்த வீடு, சோறிட்ட வயல் என்று அத்தனையையும் விட்டுக் கொடுத்து உயிரையும் விட்டவனுக்கு இப்படிப் பிச்சையிடுதல் கூட ஒருவகை வன்முறைதான். 

 

நிலம் கொடுத்து உயிரையும் தருபவனுக்கு நிரந்தரமில்லாத ஒப்பந்தத் தொழிலாளர் வேலை. கூட்டம் கூட்டமாக அள்ளிக்கொண்டு வந்த இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லாத வடமாநிலத்தவருக்கு கைநிறைய சம்பளத்தோடு நிரந்தர வேலை மற்றும் சொகுசு வாழ்க்கை. வேறு எங்கேயாவது இந்தக் கூத்து நடக்குமா? இளிச்சவாயன் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி நடக்கும். 

 

http://onelink.to/nknapp

 

முறையான பராமரிப்பின்றி, வகைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு இன்றி தொடரும் இந்த விபத்துகளும் ஒரு வகையில் பச்சைப் படுகொலைகள்தான். ஒவ்வொரு முறை விபத்துகள் ஏற்படுகிற போதும் குறிப்பிட்ட தொகையை வீசியெறிந்து அத்துடன் தனது கடமையை முடித்து கொள்கிறதே தவிர மேற்கொண்டு விபத்துகள் ஏற்படாமலிருக்க இரண்டு அரசுகளும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. 

 

விலை மதிப்பில்லாத தமிழர் உயிர்களை, வெறும் இயந்திரங்களாகப் பயன்படுத்தி வரும் என்.எல்.சி. நிறுவனம்  உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகள் தனித்தனியாக ஐம்பது லட்சம் கொடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் நிரந்தர வேலை வழங்க வேண்டும்.  

 

இதற்கு மேலும் சுரங்க விரிவாக்கம் என்று கூறி மீதமுள்ள கடலூர்,  அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களை என்.எல்.சி. என்கிற எமன் கையகப்படுத்த நினைத்தால், மாணவர்களையும் இளைஞர்களையும், எம் மக்களையும் திரட்டி மண் அதிர மாபெரும் போராட்டத்தைத் தமிழ்ப் பேரரசு கட்சி முன்னெடுக்கும்" என தனது அறிக்கையில் ஆவேசமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.