Director erode soundar passes away

தமிழ் சினிமாவில் கொங்கு தமிழுக்குப் பெருமை சேர்த்த கலைஞர்களில் முதன்மையான இயக்குனர் அவர். 'சிம்மராசி', 'முதல் சீதனம்' திரைப்படங்களை இயக்கியவரும்பிரபல சினிமா கதை வசனகர்த்தாவுமான ஈரோடு சவுந்தர் உடல் நலக் குறைவால் காலமானார்.

Advertisment

ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பு நாதகவுண்டன் பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இயக்குனர் சவுந்தர். தமிழ்த் திரையுலகில் பெரும் வெற்றிபெற்ற, 'சேரன் பாண்டியன்', 'நாட்டாமை', 'பரம்பரை', 'சமுத்திரம்' உள்ளிட்டவை திரைப்படங்களின் வசனங்களை எழுதி,பிரபல வசனகர்த்தாவாக திகழ்ந்தவர். 'சிம்ம ராசி' என்ற திரைப்படத்தை சரத்குமாரை வைத்து இயக்கி டைரக்டராகவும் அவர் திறமையை வெளிப்படுத்தினார். அவரது வசனங்களில் வெளிவந்த, 'சேரன் பாண்டியன்', 'நாட்டாமை', 'சிம்ம ராசி' படங்களுக்காக தமிழக அரசின் விருதுகளையும் பெற்று சாதனை படைத்தவர்.

Advertisment

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சரத்குமார் கூட்டணியில் உருவான 'நாட்டாமை' உள்ளிட்ட படங்கள் மூலம், கொங்கு தமிழைத்தமிழகம் முழுவதும் கொண்டுசென்ற பெருமைக்குரியவர் ஈரோடு சவுந்தர். இவர், 'முதல் சீதனம்' என்ற திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார். சென்ற சில ஆண்டுகளாக அவர் ஈரோட்டில், சொந்த ஊரான நாதகவுண்டன் பாளையத்ததில் வசித்துவந்தார். அவருக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்.

ஒரு ஆண்டுக்கு முன்பு, அவருடைய பேரன் கபிலேஷ் என்பவரை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'அய்யா உள்ளேன் அய்யா' என்ற திரைப்படத்தையும் இயக்கினார். இந்த நிலையில், உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட அவர், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டும் பயன் இல்லாமல்,5-ஆம் தேதி மதியம் இறந்துவிட்டார். அவருக்கு, வயது 63. வளர்மதி என்ற மனைவியும், கலையரசி, காயத்திரி என்ற மகள்களும் உள்ளார்கள். இருமகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

இறந்த இயக்குனர் ஈரோடு சவுந்தரின்இறுதிச் சடங்குகள் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த கிராமமான நாதகவுண்டம் பாளையத்தில் நடைபெற உள்ளது என்று உறவினர்கள் தெரிவித்தனர்.