
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி மக்களை சித்திரவதைப்படுத்தும் காவல்துறை அதிகாரி குருமூர்த்தி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஒரு காட்சியில் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின் காலண்டர் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனங்களை எழுப்பினர். அதன் பின் ‘ஜெய் பீம்’ படத்தின் காட்சியில் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், ‘ஜெய் பீம்’ படம் குறித்து நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கொண்ட கடிதம் எழுதினார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாகப் பதிலளித்திருந்தார்.

இந்த விவகாரம் முற்றிக்கொண்டே செல்லும் நிலையில் 'யாருக்குப் பயந்து படமெடுக்க வேண்டும் என தெரியவில்லை' என இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்கு பயந்து படமெடுக்க வேண்டும் என தெரியவில்லை. வம்படியாக திணித்தோ, திரித்தோ ‘ஜெய் பீம்’ படத்தில் எந்தக் கருத்துருவாக்கமும் செய்யப்படவில்லை. ஒவ்வொரு அரசியல்வாதியின் வாசலிலும் கதைசொல்ல படைப்பாளிகள் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் உருவாகிறது. நடிகர் சூர்யா மீது வன்மத்தை, வன்முறையை ஏவிவிடுவது மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்'' என்று தெரிவித்துள்ளார்.