Direct Paddy Procurement Station will be opened in 24 hours Regional Manager Assurance

அறுவடையே முடியும் நிலையிலும் பல இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவில்லை என்பதைக் கண்டித்தும், உடனடியாக திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மன்னார்குடி பகுதி விவசாயிகள் சாலையில் நெல்லைக் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில், சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்து முடிவடையும் தறுவாயில் உள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்யகொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் போனதால், நெல்லை விற்பனை செய்ய முடியாமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகளை சாலைகள், வீதிகள், வீடுகள், வயல்கள் என பல இடங்களில் கொட்டி வைத்து காவல்காத்து வருகின்றனர்.

அறுவடை தொடங்கி 1 மாதத்திற்கு மேலாகி, பல்வேறு இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் கருவகுளம் உள்ளிட்ட சில இடங்களில் புதிய நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், உணவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரிடமும் கோரிக்கை மனுக்கொடுத்தும், இதுவரையிலும் திறக்க நடவடிக்கை எடுக்காததால், திடீரென கருவகுளத்தில் விவசாயிகள் சாலையில் நெல் மூட்டைகளை அடுக்கிவைத்தும், சாலையில் நெல்லைக் கொட்டியும் போராட்டத்தில் இறங்கினர்.

Advertisment

Direct Paddy Procurement Station will be opened in 24 hours Regional Manager Assurance

தமிழக அரசையும், முதுநிலை நிலை மண்டல மேலாளரையும், உணவுத்துறை அமைச்சரையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த மண்டல மேலாளர் மற்றும் வட்டாட்சியர், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணி நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கபடும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தினால் மன்னார்குடியிலிருந்து திருச்சி, வேதாரண்யம் செல்லும் சாலையில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்டம் உணவுத்துறை அமைச்சரின் சொந்த ஊர் என்பது குறிப்பிடதக்கது.