Skip to main content

சாலையாக மாறிய ஓடை... பொதுமக்கள் போராட்டம்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான ஓடைகள் தூர்வாரும் பணிகள், தடுப்பணை, மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டும் பணிகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
 

dindugal issue


பொதுமக்களும் சாலை மறியல், ஊராட்சி அலுவலகம் முற்றுகை  உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் - செம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள முறைகேடுகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அதிகாரிகளின் சமரசத்திற்கு பின்பு மறியலை கைவிட்டனர். இந்நிலையில் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 20வது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு குறுவச்சி ஓடையை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள் மூலம் சுமார் 6 இலட்சம் செலவில் தூர்வாரினார்கள். தற்போது அந்த ஓடையை தனியார் ஒருவரின் தோட்டத்தில் வீட்டடி மனைகளாக பிரிப்பதற்காக நீர் வரத்து ஓடையில் மண் மற்றும் சரளை மண்னை கொட்டி சாலையாக அமைத்து வருவதற்கு அண்ணாநகர் மற்றும் இந்திராகாலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் முன் தரையில் படுத்து பணியை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் பிரிவில் மனு கொடுத்ததற்கு குறுவச்சி ஓடையை தூர்வாரியுள்ளோம் என்ற அறிக்கையை தந்துவிட்டு தனியாருக்காக ஓடையை தார்சாலையாக மாற்றி வருவது கிராம மக்களையும் நீர் வளம் காப்பவர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஜோசப் கூறுகையில், "கலிக்கம்பட்டி குளத்தில் நீர் நிரம்பி குறுவச்சி ஓடை வழியாக மழைநீர்; வந்து அருகில் உள்ள வாழைகுளம், பிலிப்பான்ஸ் குளத்திற்கு செல்லும். தற்போது வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணி ஓடையை சாலையாக மாற்ற உத்தரவிட்டுள்ளார். இதனால் அருகில் உள்ள இந்திரா காலனிக்குள் மழைநீர் மற்றும் வெள்ளநீர் புகுந்து உயிர் பலி ஏற்படுத்திவிடும்" என்றார்.

அண்ணாநகரை சேர்ந்த வானரசி கூறுகையில், "தமிழகம் முழுவதும் நீர் வரத்து பாதைகளை பாதுகாத்து குறைந்து வரும் நிலத்து நீரை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் ஆத்தூர் ஒன்றியத்தில் மட்டும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுப்பிரமணி நீர்வரத்து பாதையை தனியார் ஒருவருக்கு தார் சாலை அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார். அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்" என்றார்.

இந்திரா காலனியை சேர்ந்த சேசுராஜ் கூறுகையில், "ஆத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணி குறுவச்சி ஓடையை 6 இலட்சம் செலவில் தூர் வாரியதாக கணக்கு காண்பித்துள்ளார். இதுபோல் குறுவச்சி ஓடையின் மேற்குப்பகுதியில் 10 இலட்சம் செலவில் தூர்வாரியதாக கணக்கு காட்டியுள்ளார். ஆனால் இப்போது 6 இலட்சம் செலவில் தூர்வாரிய ஓடையின் மீது சாலையை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அரசு அதிகாரியே அரசு பணத்தை முறைகேடு செய்வது வேதனையாக இருக்கிறது" என்றார்.

அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வினோத் அருளானந்தம் கூறுகையில், "ஓடையின் கிழக்குப்புறம் தனியார் காண்டிராக்டர் ஒருவரின் தோட்டம் உள்ளது. குறுவச்சி ஓடையை தார் சாலையாக மாற்றி அவரது தோட்டத்தை மனைகளாக பிரிப்பதற்காக வட்டார வளர்ச்சி அதிகாரியும், ஊராட்சி செயலரும், பணம் பெற்றுக்கொண்டு இந்த ஏற்பாடை செய்து வருகின்றனர். இதனால் மழை பெய்தால் அண்ணாநகர் மற்றும் இந்திரா காலனிக்குள் மழைநீர் புகுந்துவிடும். உயிர் சேதமும் ஏற்பட்டுவிடும்" என்றார்.
 

dindugal issue


மத்திய அரசு பணத்தில் ஓடையை தூர்வாரியதாக கணக்கு காண்பித்துவிட்டு அந்த ஓடையின் மீது மண்ணை கொட்டி தார்சாலை அமைக்க அனுமதி கொடுத்த ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் ஊராட்சி செயலர் சேசுராஜை பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று என்.பஞ்சம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து முறைகேடுகள் என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வருவதால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட திட்ட இயக்குநர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஓடையின் மீது சாலை அமைக்க உத்தரவிட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி மீது மதுரை உயர்நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தமிழக அரசு பாதுகாத்து வரும் நிலையில் நீர்வரத்து பாதையை தார்சாலையாக மாற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி மீது மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்