/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gold-kavasam-file.jpg)
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவர் கோவிலில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்க 3.4 கோடி மதிப்பில் 13 கிலோ எடையில் தங்கக் கவசம் ஒன்றை வழங்கியிருந்தார். அதிமுக மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதிமுக பொருளாளர் பொறுப்பில் தங்க கவசம் வைக்கப்பட்டு வருவது வழக்கம். தேவர் ஜெயந்தி தினங்களில் மட்டும் அந்த தங்கக் கவசம் முத்துராமலிங்க தேவர் சிலை மீது சாற்றப்படும். மற்ற நேரம் அவை மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் வைக்கப்படும். முன்னர் அதிமுக ஒற்றுமையாக இருந்த காலத்தில் பொருளாளராக இருந்த ஓபிஎஸ் வசம் தங்கக்கவசம் இருந்தது.
அண்மையில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பாக சிக்கல்கள் ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த தங்கக் கவசத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சாற்ற யார் பொறுப்பேற்பது என்ற சிக்கல் அதிமுகவில் உருவெடுத்தது. தாங்கள்தான் ஒரிஜினல் அதிமுக எனவே தங்க கவசத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஓபிஎஸ் தரப்பிலும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டது.
அதிமுக தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தங்கக் கவசத்தை யாரும் பெறக்கூடாது என உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஏற்கனவே உயர்நீதிமன்றம் அதிமுக குறித்த அனைத்து தெளிவான உத்தரவுகளையும் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு தற்போது பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அந்த விதியின் படி திண்டுக்கல் சீனிவாசன் காப்பாளராக செயல்பட்டு தங்கக் கவசத்தை தேவர் சிலைக்கு சாத்திவிட்டு மீண்டும் வங்கியில் ஒப்படைக்கலாம். இதற்கும் உச்சநீதிமன்ற நிலுவைக்கும் சம்பந்தமில்லை என உத்தரவிட்டிருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gold-kavasam.jpg)
இந்நிலையில் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் இருந்த தங்க கவசத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து அவர் இந்த தங்க கவசத்தை நினைவிட பொறுப்பாளர்காந்தி மீனா என்பவரிடம் வழங்கினார். அப்போது அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)