Advertisment

இரவு நேரத்தில் கடைகளை திறக்கக் கூடாதா? வியாபாரிகள் கேள்வியும் காவல்துறையின் பதிலும்...

கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் ஹோட்டல், பெட்டிகடைகள், டீ கடைகள் உள்பட வியாபார தலங்களை வியாபாரிகள் திறந்து வைத்துக் கொள்ளலாம் என அறிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கினார்கள்.

Advertisment

dindigul

அதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் முதல்வர் உத்தரவின்படி பல இடங்களில் இரவு கடைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, நத்தம் உள்பட பலபகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய பகுதிகளில் இரவு கடை என்பது அறவே இல்லை. எப்பொழுதும்போல் இரவு பதினொரு மணிக்குமேல் கடைகளை வைக்ககூடாது என போலீசார் வழக்கம்போலவே கடைக்காரர்களை, பெட்டி கடைகளை, ஹோட்டல்களையும் அடைக்க வைத்து வருகிறார்கள்.

இதனால் பஸ் பயணிகள் இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டுக்கு வரும்போது தங்கள் குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் கூட வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அதோடு பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள சிலகடைக்காரர்களிடமும் ஹோட்டல் உரிமையாளர்களிடமும் கேட்டபோது, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஓரளவுக்கு இரவு கடைகள் வைத்திருந்தோம், அவர் மறைவுக்குபிறகு வியாபாரமும் இல்லை இரவு கடைகளையும் வைக்கக்கூடாது என போலீசார் நெருக்கடி கொடுத்தனர். இரவு 11 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டு உள்பட நகரில் எந்த ஒரு பகுதிகளிலும்இரவு கடைகள் இல்லாத அளவுக்கு கொண்டு வந்தனர்.

Advertisment

dindigul

இதனால் டீ கடைக்கள், ஹோட்டல்கள் மற்றும் பிளாட் பாரத்தில் உள்ள சிறு கடைகாரர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தோம்.அதிலேயும் 11 மணிக்கு அடைக்க வேண்டிய கடைகளுக்கு பத்தரை மணிக்கு எல்லாம் போலீசார் சைரன் சவுண்டு கொடுத்து முதலில் லைட்டை ஆப் பண்ண சொல்லிவிடுவார்கள். அதன் பிறகு கடைகளை அடைக்க சொல்வார்கள். ஆனால் பஸ் ஸ்டாண்டுகளை பொருத்தவரை கடைகளை உடனுக்குடன் அடைக்கவும் முடியாது. அதுனால லைட்டை ஆப்பண்ணிவிட்டு ஸ்கிரீன் போட்டு வெளியே படுத்து விடுவதால் சில நேரங்களில் பொருட்கள் திருடுபோயும் விடுகிறது. அதற்கு சம்பள பணத்தில் கொடுக்க வேண்டிய நிலையும் இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கலாம் என உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நாங்களும் இரவு கடைகளை திறந்து வைக்க முன்வந்தோம். ஆனால் போலீசார் உடனே எங்களை எல்லாம் அழைத்து இரவு கடைகள் எல்லாம் வைக்க வேண்டுமென்றால் ஒரு கடைக்கு 10 பேராவது வேலை பார்க்கவேண்டும். அதோடு ஒவ்வொரு கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்திக் கொள்ள வேண்டும் அதற்கு தயார் என்றால் நீங்கள் கடைகளை திறந்து வையுங்கள் இல்லையென்றால் வழக்கம்போல் பதினோரு மணிக்கு கடைகளை அடைத்து விடவேண்டும் இந்த விதிமுறைகளை மீறி கடைகளைத் திறந்து வைத்தீர்கள் என்றால் உங்க மேல் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என மிரட்டினார்கள்.

அதனால இரவு கடைகளை வைப்பதும் இல்லை நடக்கிற வியாபாரத்திற்கு பத்துபேரைவேலைக்கு வைக்கமுடியாது. சிசிடிவி கேமராபொருத்தவும் முடியாது அதுனால இரவு கடைகளை திறந்து வைப்பதில்லை. ஆனால் தேனி, மதுரை, திருச்சி போன்ற பல ஊர்களில் உள்ள பஸ் ஸ்டாண்டில் கூட இரவு கடைகள் படு ஜோராக நடந்து வருகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும்தான் பஸ் ஸ்டாண்டில் கூட இரவு கடைகள் வைக்கக்கூடாது என போலீசார் கெடுபிடி செய்கிறார்கள்.

அதையும் மீறி வைத்தால் உடனே எங்களை ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் அடித்து துன்புருத்தி விடிய விடிய உட்காரவைத்து அதற்கு ஒரு அபராதமும் போட்டு விடுகிறார்கள். அதுபோல் தொடர்ந்து கடைகள் நடத்தினீர்கள் என்றால் கஞ்சா கேஸ்சில் உள்ளே போய்விடுவீர்கள் என மிரட்டுகிறார்கள். அதனாலேயே இரவுக் கடைகளை வைப்பதில்லை.

தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கலாம் என உத்தரவிட்டும் கூட அதை காற்றில் பறக்க விடும் அளவுக்கு போலீஸார் செயல்பட்டு வருகிறார்கள்.கடைகள் திறந்து இருந்தால்தான் திருட்டு குற்றங்களை தடுக்க முடியும் ஆனால் போலீசார் கடைகளை அடைக்க சொல்வதன் மூலம் திருட்டு குற்றங்களும் மாவட்டத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறினார்கள்.

மேலும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் முதல்வர் உத்தரவின்படி பஸ்டாண்டு உள்பட பல பகுதிகளில் இரவு கடைகள் செயல்பட்டு வருகிறது. அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பஸ் ஸ்டாண்டுகள் உள்பட சில முக்கிய பகுதிகளில் இரவு கடைகள் நடத்த மாவட்ட எஸ்பி சக்திவேல் அனுமதி வழங்கவேண்டு என சிறு பெரும் வியாபாரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றார்.

dindigul

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேலை தொடர்புகொண்டு கேட்டபோது, ''வியாபாரிகள் டி.எஸ்.பி.யை சந்தித்து இரவு கடைகள் வைப்பதற்கு அனுமதி அளிக்குமாறு மனு கொடுத்தனர். இதையடுத்து அந்தந்த பகுதிகளில் உள்ள வியாபரிகளை அழைத்து இதுதொடர்பாக கூட்டம் நடத்த டி.எஸ்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டது. அந்தக் கூட்டத்தில்,கடைகளில் சிசிடிவி கேமராமக்கள் பொருத்த வேண்டும், எந்த இடத்தில் இரவு கடைகள் திறக்க திட்டமிட்டுள்ளீர்கள், அந்த இடத்தை தெரிவித்தால் போலீசார் இரவு ரோந்து வரும்போது அதனையும் கவனத்தில் கொள்வார்கள். போலீசாரின் ரோந்து பணிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம் என இரவு கடைகள் வைப்பதற்கு விதிமுறைகள் எடுத்து சொல்லப்பட்டது. போலீசார் யாரையும் இரவு கடைகள் வைக்கக்கூடாது என்று டார்ச்சர் செய்யவில்லை. அது தவறான தகவல். வியாபாரிகளுக்கான குறைகளை எந்த நேரத்திலும் எஸ்.பி. அலுவலகத்தில் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

police Merchants shops dindigul
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe