Dindigul Leoni gets the post of policy outreach secretary!

Advertisment

பட்டிமன்ற நடுவரும் நகைச்சுவைத் தென்றலுமான திண்டுக்கல் லியோனி தி.மு.கவின் கலை இலக்கியப் பேரவையின் மாநில துணைத் தலைவராக இருந்துகொண்டு கட்சி பணியாற்றி வந்ததின் மூலம் முன்னாள் தலைவரும் முதல்வருமான கலைஞரிடமும் இன்னாள் தி.மு.க தலைவர் ஸ்டாலினிடமும் நெருக்கமாக இருந்து வந்தார்.

இந்தநிலையில்தான் ஆண்டிபட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன் சமீபத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் ஐக்கியமானதின்பேரில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை ஸ்டாலின் கொடுத்திருந்தார். தற்பொழுது தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்ததின் பேரில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. அந்த மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பதிவியை, திண்டுக்கல் லியோனிக்கு ஸ்டாலின் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்டாலினை லியோனி சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துபெற்றார். அதோடு மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின் திண்டுக்கல் திரும்பிய மாநில கொள்கை பரப்புச் செயலாளர் லியோனி தி.மு.கதுணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதோடு மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒட்டன் சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணியையும், கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமாரையும் சந்தித்து வாழ்த்துபெற்றார்.