திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகத்திடம் தரை வாடகைக்கு அனுமதி பெற்றுவிட்டு அனுமதி இல்லாமல் கடைகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த கடைகளை தனிநபர்கள் கூடுதலாக வாடகைக்கு விடுவதாகவும், இதனால் பேரூராட்சி நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்துவதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையில் அனுமதி இல்லாத கடைகள் அனைத்தையும் அகற்றுவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

dindigul lawyer office demolished

Advertisment

Advertisment

இந்த நிலையில் நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் கடையை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் செயல்பட்டு வந்த திமுக வழக்கறிஞர் செந்தில் கணியனின் சட்ட அலுவலத்தை இடிப்பதற்கு பேரூராட்சி ஊழியர்கள் முயற்சி எடுத்தனர். அப்போது அங்கு வந்த செந்தில் கணியன் ஆதரவு வழக்கறிஞர்கள் கட்டிடத்தை அகற்றுவதற்கான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், கட்டிடத்தை இடிக்க கூடாது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் பேரூராட்சி ஊழியர்கள் அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் இடிக்கப்பட்ட அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு, மேலும் இடிக்க விடாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த டிஎஸ்பி பாலகுமாரன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன்பிறகு வழக்கறிஞர்களை வெளியே அனுப்பி வைத்துவிட்டு கட்டிடம் இடிக்கப்பட்டது. இச்சம்பவம் நிலக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.