
திண்டுக்கல் முத்தனம்பட்டி அருகே இயங்கிவரும் ஒரு தனியார் கல்லூரியின் தாளாளர், அக்கல்லூரியின் மாணவிகளைப் பாலியல் தொல்லை செய்ததின் பேரில், கல்லூரி தாளாளர் ஜோதி முருகனையும், வார்டன் அர்ச்சனாவையும் கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அதனைத் தொடர்ந்து வார்டன் அர்ச்சனாவை போலீசார் கைது செய்தனர். மேலும், தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் நீதிமன்றத்தில் நீதியரசர் வெங்கடேசனிடம் ஜோதி முருகன் சரணடைந்தார்.
இந்த நிலையில், திடீரென அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘கல்லூரியில் இருக்கக்கூடிய இன்னும் மூன்று நபர்களை கைது செய்ய வேண்டும்; கல்லூரியை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்திட வேண்டும்; தவறும் பட்சத்தில் தற்சமயம் பயிலக்கூடிய மாணவர்களை வேறொரு கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்த விஷயம் போலீசார் காதுக்கு எட்டவே பேருந்து நிலையத்துக்கு வந்து, போராட்டத்தில் குதித்த மாணவர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினார்கள். அப்படி இருந்தும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.