Dindigul case Police arrested the culprits in an hour

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே மலையப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மருது. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த கீதா என்ற பெண்ணை திருமணம் செய்வதற்காக பெண் கேட்டுச் சென்றுள்ளார். திருமணப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, அதே மலையப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் மருதுவிற்கு பெண் கொடுக்கக்கூடாது எனப் பெண் வீட்டாரிடம் கூறி தடை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மருது, கீதா திருமணம் நடைபெற்றுள்ளது.

Advertisment

இந்த நிலையில், தனக்கு பெண் கொடுப்பதற்கு தடை போட்ட சாமிதுரை மீது மருது கோபமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பிரச்சனை தொடர்பாக நேற்று முன்தினம், இரண்டு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை மருதுவிற்கும் சாமிதுரைக்கும் நேரடியாக மோதல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இச்சம்பவத்திற்குப் பின், சாமிதுரை வத்தலக்குண்டு வந்துள்ளார். உசிலம்பட்டி சாலை பிரிவில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்துவிட்டு, பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த சாமிதுரையை மருது, அவரது உறவினர் உதயகுமார் ஆகியோர் அரிவாள் கொண்டு சரிமாரியாக வெட்டத் தொடங்கினர். கடையிலிருந்து வெளியே தப்பி ஓடிய சாமிதுரையை விரட்டிச் சென்று நடுரோட்டில் வெட்டிச் சாய்த்தனர். ரத்தவெள்ளத்தில் சாமிதுரை சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

இதனை அடுத்துதிண்டுக்கல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு கொலை சம்பவத்தில் தொடர்புடைய மருது மற்றும் அவரது உறவினர் உதயகுமார் ஆகியோரை ஒரு மணி நேரத்தில் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையான சாமிதுரையின் உறவினர்கள் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனப் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.

Advertisment