Skip to main content

நடவடிக்கை எடுக்க மறுத்த இன்ஸ்பெக்டர்; விபரீத முடிவெடுத்த விவசாயி

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

dindigul ammainaickanur farmer pandi incident woman police inspector

 

திண்டுக்கல் மாவட்டம்  அம்மையநாயக்கனூர் அருகே உள்ள குள்ளலகுண்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி பாண்டிக்கு கொடைரோடு சிறுமலை அடிவாரம் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியில் உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்று கூறி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டி புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீது இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் பாண்டி நிலக்கோட்டை நீதிமன்றத்தை நாடி வழக்குப் பதிவு செய்வதற்கான உத்தரவையும் வாங்கி கொடுத்தார். அப்படி இருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.

 

இதனால் மனம் நொந்து போன விவசாயி பாண்டி கடந்த 9 ஆம் தேதி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்குச் சென்றவர் காவல் நிலைய வாசற்படி முன் உட்கார்ந்து விஷம் குடித்துள்ளார். அதைக் கண்ட போலீசார் உடனே பாண்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இந்நிலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் உடனே பாண்டி கொடுத்த புகாரின் பேரில் நாச்சியப்பன், சங்கர், சின்ன கருப்பு ஆகிய 3 பேர் மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் முன்பாக பாண்டி விஷம் குடித்துவிட்டு உட்கார்ந்து இருந்தபோது இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி ஃபோனில் பேசிக்கொண்டிருந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் உள்ள சில போலீஸாரிடம் கேட்டபோது, "இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி  ஸ்டேஷனுக்கு பொறுப்பு ஏற்றதிலிருந்து யாரையும் மரியாதை இல்லாமல் தான் பேசுவார். ஆனால் வசதி படைத்தவர்கள் என்றால் அவர்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவார்.  அதுபோலதான் பாண்டி வழக்கிலும் நடந்திருக்கிறது. பலமுறை பாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தனது புகார் எண் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டாலும் கூட சரி வர இன்ஸ்பெக்டர் பதில் சொல்வதில்லை. எனவே எனது புகார் மீது நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்கிறீர்கள்,  நான் செத்தால் தான் எப்.ஐ.ஆர். போடுவீர்கள் என்று பாண்டி கூறினார். அதற்கு இன்ஸ்பெக்டர் மரியாதை  இல்லாமல் வாய்க்கு வந்தபடி அசிங்கமாக பேசினார்.

 

அதனால்தான் பாண்டி, தான் மறைத்து வைத்திருந்த விஷ மருந்தை எடுத்து போலீஸ் ஸ்டேஷன் வாசப்படி முன்னே குடித்துவிட்டு மயங்கியவாறே உட்கார்ந்துவிட்டார். இந்த விஷயம் இன்ஸ்பெக்டருக்கு தெரிந்தும் கூட எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் பாண்டி முன் நின்று கொண்டு ஃபோன் பேசிக்கொண்டே இருந்தார். அப்பொழுது விஷம் குடித்து உட்கார்ந்திருந்த பாண்டியும் மயங்கிய நிலையில் அப்படியே விழுந்துவிட்டார் அதையும் இன்ஸ்பெக்டர் கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகு காவல் நிலையத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் பாண்டியை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயிரின் மதிப்பு தெரியாமல் கல் நெஞ்சு படைத்த இன்ஸ்பெக்டராக இருந்தது மனம் வேதனையாக இருக்கிறது. இந்த ஸ்டேஷனுக்கு பொறுப்பேற்று இந்த இரண்டு வருட காலத்தில் பொது மக்களையும் போலீஸ்காரர்கள் கூட வாய்க்கு வந்தபடி அசிங்கமாக பேசுவது தான் இந்த இன்ஸ்பெக்டர் பணி அதனாலேயே இவருக்கு வேலை பார்த்த டிரைவர் கூட மாறுதலாகி போய்விட்டார். ரோல்காலில் போலீஸ்காரர்களை கூட மரியாதை இல்லாமல் தான் பேசுவார். சமீபத்தில் கூட ரோல் காலுக்கு வந்த பெண் போலீசை யாரை மயக்க இப்படி மேக்கப் போட்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார். இதனால் அந்த பெண் போலீஸ் டிஎஸ்பி வரை புகார் கொடுத்தும் இருக்கிறார்.  இன்ஸ்பெக்டரின் மரியாதை இல்லாத பேச்சாலும் செயல்பாடுகள் மூலமும் அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது" என்று கூறினார்கள்.

 

dindigul ammainaickanur farmer pandi incident woman police inspector

இது பற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரிடம் கேட்டபோது, "பாண்டி கொடுத்த புகார் மற்றும் பாண்டியன் மகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து கொண்டு தான் இருந்திருக்கிறார். அதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று என்னிடம் கூறியிருந்தால் கூட உடனே நடவடிக்கை எடுக்க சொல்லி இருந்திருப்பேன். அதை விட்டுட்டு அப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டார். ஆனால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே உள்ள டீக்கடையில் விஷ மருந்து குடித்துவிட்டு தான் அந்த பாண்டி காவல் நிலையத்தின் முன் உட்கார்ந்து இருக்கிறார். அதை கண்டு உடனே அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு தான் அவர் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்திருக்கிறார். இருந்தாலும் இதைப்பற்றி டிஎஸ்பி தலைமையில் விசாரணைக் குழு அமைத்திருக்கிறேன். அந்தக் குழு விசாரணை அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்த நிலையில் தற்போது அம்மைநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமியை ஆயுதப் படைக்கு மாற்றி அதிரடி உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி பாஸ்கரன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

பரிதாபமாக உயிரிழந்த பெண் ஆய்வாளர்; உடலைச் சுமந்து சென்ற எஸ்.பி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.