Skip to main content

தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய், குழந்தைகளை காப்பாற்றிய போலீசார்!

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

    திண்டுக்கல் நாகல் நகரில் வசித்து வருபவர் தாமோதரன். இவரது மனைவி ரோகிணி.  இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தான் குடும்ப தகராறில் தாமோதரன் மனைவி ரோகிணியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இதனால் மனம் நொந்துபோன மனைவி ரோகிணி இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக ஒட்டன்சத்திரம் காளஞ்சிபட்டியில் இருக்கும்தனது தாய் சுப்புலட்சுமிக்கு செல்போன் மூலம் தகவல் கூறிவிட்டு நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி அணைக்கு சென்றார்.

 

d

 

அதைக்கண்டு பதறிப்போன தாயார் சுப்புலட்சுமி உடனே திண்டுக்கல்லுக்கு வந்து நாகல் நகர் மற்றும் சில இடங்களில் மகளையும், பிள்ளைகளையும் தேடி பார்த்தும், கண்டு பிடிக்க முடியவில்லை என்பதால் நகர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த நகர் தெற்கு ஆய்வாளர் சரவணன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் ரோகிணியின் செல்போன் மூலம் தொடர்புகொண்டு அரை மணி நேரத்திற்கு மேலாக ரோகிணியிடம் பேசி சமாதானம் செய்து கொண்டே அணைப்பட்டிக்கு சென்று ரோகிணியை கண்டுபிடித்து அறிவுரைகளையும் கூறி தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்தை கைவிட செய்தனர். 

 

அதோடு ரோகிணியையும் குழந்தைகளையும் திண்டுக்கல் நகர தெற்கு காவல்நிலயத்திற்கு அழைத்து வந்து ரோகிணியின் கணவர் தாமோதரனை வரவழைத்து இருவருக்கும் இன்ஸ்பெக்டர் சரவணன், மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அறிவுரைகளை வழங்கி இருவரையும் சேர்த்து வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இப்படி தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாயையும், இரண்டு குழந்தைகளையும் இன்ஸ்பெக்டரும், சிறப்பு ஆய்வாளரும் கண்டுபிடித்து அவர்களை தற்கொலையிலிருந்து மீட்டு கணவருடன் சேர்த்து வைத்ததை கண்டு எஸ்.பி. சக்திவேல் உள்பட போலீஸ் அதிகாரிகளும் நகர முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்!
 

சார்ந்த செய்திகள்