/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ttv_4.jpg)
மன்னார்குடியில் டிடிவி.தினகரன் பங்குபெற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, தேரடி திடலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ், சார்பில் மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளருக்கும், மன்னார்குடி நகர காவல் ஆய்வாளருக்கும் மனு அனுப்பினார். அதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மன்னார்குடி பகுதியில் அதிமுகவினரே மூன்று நான்கு குழுக்களாக இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதாலேயே அனுமதிக்கவில்லை என்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் அனுமதித்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, ஆளுங்கட்சியோ, பிற கட்சிகளோ, அமைச்சர்களோ இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கியது இல்லையா? அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை? என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுப்பது தவறு என அறிவுறுத்திய நீதிபதி, தற்போதுள்ள மனுதாரரும் அவரது கட்சி நிகழ்ச்சிக்காக அனுமதி கேட்கவில்லை என்பதால் தினகரன் கட்சியின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க காவல்துறை உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் தரப்பில் புதிதாக அனுமதி கோரி மனு கொடுக்க வேண்டும் என்றும், அதை பரிசீலித்து அவர்கள் அனுமதி கேட்கும் நாளில் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)