
விழுப்புரம் மாவட்டம், ஆசாரங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் சென்னைப் பகுதியில் டெலிகாம் சென்டர் நடத்தி வருகிறார். தற்போது சொந்த ஊரான ஆசாரங் குப்பத்தில் தங்கி உள்ளார். இந்நிலையில் அவருக்குச் சொந்தமான வைரக் கற்கள் பதித்த 4 மோதிரங்கள் 52.6 கிராம் இருந்தது. இதனை விற்பனை செய்வதற்காக கருணாநிதி மற்றும் அவருடைய நண்பர் ராவணன் மற்றும் வழக்கறிஞர் பிரகலாதன் ஆகியோருடன் கடந்த 13ஆம் தேதி கூட்டேரிப்பட்டு பகுதிக்குச் சென்றனர்.
அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த புரோக்கர் அருள்முருகன், அவருடன் வந்த செந்தில் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களுடன் காரில் கூட்டேரிப்பட்டு - தீவனூர் சாலையில் சென்றபோது வழியில் கோபாலபுரம் என்ற இடத்தில் கருணாநிதியின் காரை மடக்கி மிளகாய்ப் பொடி தூவி கத்தி முனையில் கருணாநிதியிடம் இருந்த 2 கோடி மதிப்பிலான நான்கு வைர மோதிரங்களை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த புரோக்கர் அருள்முருகன் மற்றும் அவருடன் வந்த செந்தில் ஆகியோரை மடக்கிப்பிடித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையடித்த மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், திண்டிவனம் டி.எஸ்.பி கணேசன் மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டு புரோக்கர்களாக செயல்பட்ட அருள்முருகன் அவரது நண்பர் செந்தில் ஆகிய இருவரிடம் இருந்த செல்ஃபோன்களைக் கைப்பற்றி விவரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை செய்தனர்.
இந்நிலையில் தீவனூர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மகன் பரந்தாமன் (29), இவரது உறவினரான, ஆந்திர மாநிலம் சித்தூர் தனியார் பி.எட் கல்லூரி பேராசிரியர் மணிகண்டன் (31), தீவனூரைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி அருள் முருகன் (24), சித்தூர் நயனம்பள்ளி ஓம்சக்தி கோவில் தெருவைச் சேர்ந்த பிக்காரி மகன் டிரைவர் மகேஷ் (21), சித்தூர் பண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய மகன் விஜயசேகர் (31) ஆகிய 5 பேரைக் கைது செய்த போலீசார் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.