Skip to main content

தபால் கார்டில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் வித்தியாச தண்டனை!

Published on 01/11/2020 | Edited on 01/11/2020

 

மறைமுகத் தாக்குதல் நடக்கிற கரோனா வைரஸ்சுக்கு இதுவரை தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படாத நிலையில் அதன் சோதனை நிகழ்ச்சிகள் உச்சக்கட்டத்திலிருக்கின்றன. அதனிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பயன்படும் ஆயுதமே முக கவசம் தான். அதன் பயன்பாடு பற்றிய பிரச்சாரம் முழுவீச்சில் நடந்தாலும் தமிழகத்தில் 35 சதவிகிதம் பேர்கள் மாஸ்க் அணியாமலேயே வெளியே சென்று வருகிறார்கள். சமூக இடைவெளியுமில்லை என ஆய்வு ரிப்போர்ட்கள் வெளியேறுகின்றன. எத்தனை விழிப்புணர்வுப் பிரச்சாரம்  மேற்கொண்டாலும் முன்னேற்றமில்லைதான்.

நெல்லையிலும், போக்குவரத்து மற்றும் சந்தைப் பகுதிகளில் மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் முக கவசம் அணியாமல் சுற்றி வருவது தொடர் நிகழ்வாகிப் போனதால், நெல்லையின் தச்சநல்லூர் பகுதியின் சோதனைச் சாவடியில் மனித உரிமைகள் பிரிவு உதவி கமிஷனர் சேகர் தலைமை குழுவின் இன்ஸ்பெக்டர் மீராள் பானு, எஸ்.ஐ.காசிப்பாண்டியன் மற்றும் போலீசார் வாகன சோதனையின் போது மாற்று வகையான பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அந்தப் பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு கரோனா தடுப்பு அறிவுரைகளை வழங்கினர். அத்துடன் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பும் போது முக கவசம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வரமாட்டேன் என்று அவர்களைப் போஸ்ட் கார்டில் எழுத வைத்தனர். பின்னர் அந்தக் கார்டுகளை அவர்களின் வீட்டு முகவரிக்கே போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த மாறுதலான பிரச்சாரமும் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுபவையாக அமையும் என்றும் நம்பப்படுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்