ADVERTISEMENT

இரத்தம் எடுத்து சோற்றில் பிசைந்து காற்றில் வீசும் விநோத திருவிழா

07:22 AM Mar 14, 2020 | kalaimohan

சிறுவன் கழுத்தில் கத்தியை வைத்து.. பூசாரி தொடையில் கீறி இரத்தம் எடுத்து சோற்றில் பிசைந்து பில்லிமுனிக்கு காற்றில் வீசும் வழக்கம் மாறாத திருவிழா நடந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள வாராப்பூர் கிராமத்தில் தான் இந்த விநோத திருவிழா காலங்காலமாக நடக்கிறது. நேற்றும் நடந்தது. முந்தைய காலத்தில் பில்லிமுனீஸ்வரரை வணங்கும் குலத்தினர் இறைவனுக்கு படையல் போட தன் குலத்தில் உள்ள ஆண்குழந்தையின் கழுத்தை அறுத்து வரும் இரத்தத்தில் சோற்றை பிசைந்து காட்டுக்குள் சென்று பில்லி முனிக்கு பில்லி சோறு கொடுப்பதாக நான்கு பக்கமும் வீசிவிட்டு வந்துள்ளனர். காலப் போக்கில் பல குடும்பங்களில் ஒற்றை ஆண்குழந்தை மட்டும் இருந்ததால் குழந்தையின் கழுத்தில் அறுப்பதை நிறுத்தி தொடையில் கீறி சிரட்டையில் இரத்தம் பிடித்து சோற்றில் பிசைந்து வீசினால் போதும் என்று முனி சொல்லிவிட்டதாகக் கூறும் அப்பகுதி மக்கள் இப்போதும் அந்த மரபை மாற்றாமல் செய்து வருகிறார்கள். இந்த விழாவிற்கு ஜாதிகள் தடையில்லை அனைத்து சமூகத்தினரும் கலந்து நின்று செய்கிறார்கள்.


நெருஞ்சிப்பட்டி உள்ளிட்ட 18 பட்டி கிராம மக்களும் நெருஞ்சிப்பட்டி உருமர் மற்றும் பெரம்மர் கோயில் வாசலில் ஒன்று கூடி பூசாரிகள் சிவப்பு கச்சை கட்டி, காலில் சலங்கை கட்டி சாமியாட்டம் தொடங்க மேளதாளங்களுடன் கறுப்பர் கோயிலுக்கு சென்று அங்கு தான் பிடிசோறு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

சிறுவன் ஒருவனை தனிமையில் குடிலில் அமர வைத்து அவன் கழுத்தில் கத்தியை வைத்து பிறகு பூசாரி தொடையில் கீறி வழியும் இரத்தத்தை சிரட்டையில் பிடித்து தயாராக இருந்த சோற்றில் பிசைந்து படையல் வைத்து அய்யனார் கோயிலில் இருந்து வந்த பூசாரிகளோடு, கச்சை கட்டி வந்த பூசாரிகளும் சேர்ந்து அரை கி.மீ சென்று காட்டுக்குள் இருக்கும் பில்லி முனிக்கு நான்கு பக்கமும் காற்றில் ரத்த சோற்றை வீசினார்கள்.

பில்லிமுனிக்கு பில்லி சோறு கொடுக்கும் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது. கிராமங்களில் இது போன்ற விநோத திருவிழாக்கள் இன்னும் பழமை மாறாமல் நடப்பதை காண முடிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT