Advertisment

வித்தியாசமான போராட்டம் நடத்திய விவசாயி!

Transformer electricity

Advertisment

பெரம்பலூர் மாவட்டம் கோவில்பாளையம் கிராமத்தினை ஒட்டியுள்ளது புது ஏறி. இந்த பகுதியில் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் மூலம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கிணறுகளில் உள்ள பம்பு செட்டுக்கு மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு, அதன்மூலம் தண்ணீர் இறைத்து அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட இந்த டிரான்ஸ்பார்மர் கடந்த ஒரு மாதமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் விவசாயம் செய்துவந்த விவசாயிகள் தற்போது அவர்கள் பயிரிட்டுள்ள கரும்பு நெல் ஆகியவை தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகின்றன.

இந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக சீர் செய்து தருமாறு மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தரப்பில் பல்வேறு முறை கோரிக்கைகள் எழுத்து மூலம் கொடுத்துள்ளனர் விவசாயிகள். அதைப்பற்றி மின்சார வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இதைக் கண்டித்து கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் காலை எட்டு மணிக்கு பழுதடைந்து நின்றிருந்த டிரான்ஸ்பார்மரில் 10 அடி உயரத்தில் ஏரி மின்கம்பத்தில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு அதன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துகொண்டு தனது வித்யாசமான போராட்டத்தைத் துவக்கினார்.

Advertisment

அவர் கூறும்போது, எனக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கரில் கரும்பும், ஒரு ஏக்கரில் நெல்லும் பயிர் செய்துள்ளேன். இந்தப் பயிர்களுக்காக எனது கிணற்றில் இருந்து பம்புசெட் மூலம் மின் இணைப்புக் கொடுத்து மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் இறைத்து விவசாயம் செய்து வருகிறேன். கடந்த ஒரு மாதமாக இந்த டிரான்ஸ்பார்மர் பழுதாகி உள்ளதால் பயிர் செய்துள்ள கரும்பு நெல் எல்லாம் காய்ந்து கருகிவிட்டன.

அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் நம்மைப்போன்ற மனிதர்களாலேயே தாங்கமுடியவில்லை, தண்ணீரின்றி அந்தப் பயிர்கள் எப்படி வாழும்? இதனால் எனக்கு இரண்டரை லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில் என் குடும்பத்தை எப்படிக் காப்பாற்ற முடியும்? எனது விவசாய நிலத்தில் உள்ள கரும்பு நெல் ஆகிய வாடிய பயிரைக் கண்டு என் மனம் வாடியது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும் மின்சாரத்துறை அதிகாரிகள் இதைச் சரிசெய்ய முன் வரவில்லை. எனவே தான் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி கட்டிலில் அமர்ந்து போராட்டம் நடத்துகிறேன் என்றார் இளையராஜா.

இவரின் போராட்டம் காவல்துறைக்கும் மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் தெரியவந்ததையடுத்து குன்னம் பகுதி மின்சார வாரிய இளநிலை பொறியாளர் அர்ச்சனா, இளையராஜாவிடம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர் பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மர் சரி செய்யும் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார். இதையடுத்து மதியம் 2 மணியளவில் தனது ஆறு மணி நேர போராட்டத்தை முடித்துக்கொண்டு இளையராஜா கட்டிலை விட்டு கீழே இறங்கினார். இச்சம்பவம் மின்சாரத்துறை அதிகாரிகள் மத்தியிலும் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://onelink.to/nknapp

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அப்படி வள்ளலார் பிறந்த தமிழகத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் விவசாயப் பயிர்கள் கருகிப் போனாலும் கவலை இல்லை என்று கல் மனம் படைத்தவர்களாக இருப்பது தான் வேதனையைத் தருகிறது என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

Agricultural Farmers Electricity
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe