‘டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் உயரதிகாரிகள் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் கைது செய்யவில்லையா?’ – உயர் நீதிமன்றம் கேள்வி!

Did you know the elite authorities involved in the TNPSC have not been arrested?

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-2-ஏ, குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகளில்,மிகப்பெரிய முறைகேடுகள் அரங்கேறி வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் உள்பட பலரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. ரெக்கார்டு கிளார்க் ஓம் காந்தன், ஜெயக்குமாரின் கூட்டாளிகள் சாபூதீன், பிஜோஸ்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுதரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அய்யப்பராஜ், ‘டி.என்.பி.எஸ்.சி. நடத்திய 3 தேர்வுகளில் நடந்த மோசடிகளைத்தான் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இன்னும் இதுபோல எத்தனை தேர்வுகளில் முறைகேடு நடந்தது என்பது தெரியவில்லை.இளைய தலைமுறையினருக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வில் முறைகேடு செய்து,அந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளதால் மனுதாரர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதி ‘3 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. 3 அதிகாரிகள் தலைமையில்3 தனிப்படையினர் புலன் விசாரணை செய்கின்றனர். இந்த 3 தனிப்படையின் விசாரணையை எந்த அதிகாரி மேற்பார்வையிடுகிறார்? முறைகேட்டில் ஈடுபட்டதாக டி.என்.பி.எஸ்.சி.யின் கீழ்மட்ட ஊழியர்களை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். மேல்மட்ட அளவில் யாரும் முறைகேட்டில் ஈடுபடவில்லையா? உயர் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே அவர்களை போலீசார் கைது செய்யாமல் இருக்கின்றனரா?‘ என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

அப்போது,குற்றவியல் வழக்கறிஞர் ‘கரோனா ஊரடங்கினால் புலன் விசாரணையை தீவிரமாக மேற்கொள்ள போலீசாரால் முடியவில்லை’ என்றார். அதற்கு நீதிபதி, ‘புலன்விசாரணைக்கு இதுதான் சரியான நேரம். ஊரடங்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு என்ன வேலை உள்ளது? முறைகேட்டில் ஈடுபட்டவர்களைகைது செய்யலாம். புலன் விசாரணையைதீவிரப்படுத்தலாம். ஏன் இதைசெய்யவில்லை? அப்போதுதான், புலன்விசாரணை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வரும். விசாரணை ஒரே நிலையில் இருப்பதற்கு பதில், அடுத்த கட்டத்துக்கு போலீசார் எடுத்துச் செல்ல வேண்டும். கடந்த சில நாட்களாக விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை’ என்று கருத்து தெரிவித்தார். பின்னர், இந்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாகக் கூறினார்.

highcourt tnpsc
இதையும் படியுங்கள்
Subscribe