
நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் 9 உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை அண்மையில் அமைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். பொதுமக்களிடமிருந்து நீட் தேர்வு குறித்த கருத்துக்களைப் பெற்றுவருகிறது இந்தக் கமிட்டி. இந்நிலையில், இந்தக் கமிட்டிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒரு சட்டம் இந்தியா முழுவதுக்கும் பொதுவானது. மேலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய மருத்துவ ஆணையம் 2019இல் கொண்டு வந்த நீட் தேர்வு தொடர்பான கருத்துருவைத்தான் சட்டமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை மீறும் வகையில் தமிழக அரசு கமிட்டி அமைத்திருக்கிறது. இது, அனுமதிக்கத்தக்கது அல்ல” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வில் இன்று (29.06.2021) வந்தபோது, கரு. நாகராஜன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரியும், தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் ஆஜரானார்கள். மனுதாரர் தரப்பில் பேசிய ராகவாச்சாரி, கமிட்டி அமைத்தது தவறு என வாதாடினார். அதனை எதிர்க்கும் வகையில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழக அரசு இந்தக் கொள்கை முடிவை எடுத்துள்ளது” என்று வாதிட்டார்.
ஆனால் நீதிபதிகளோ, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது. மேலும், இந்தக் கமிட்டியை அமைப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பி, மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன் வழக்கின் விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.