Skip to main content

சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெறும் மருத்துவர்களை கரோனா பணியில் ஈடுபடுத்த தடை கோரி வழக்கு! – பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

Diabetes doctors in corona ward! - Government of Tamil Nadu ordered to respond!

 

 

சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் மருத்துவர்களை கரோனா பணியில் ஈடுபடுத்த தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் மருத்துவர்களை, கரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

ஆனால்,  இந்த உத்தரவை மீறி, சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தவிர பிற மருத்துவமனைகளிலும், பல மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மருத்துவர்கள் கரோனா பணியில் ஈடுபடுத்தப்படுவதாகக்கூறி, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

 

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏராளமான மருத்துவர்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், இது மருத்துவர்களை மனரீதியாக பாதிக்க செய்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு செப்டம்பர் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
Rules of Conduct for Elections Dravidar Kazhagam who worked strategically

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Next Story

உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; தேர்தல் ஆணையத்தை நாடிய ஓ.பி.எஸ்.!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High Court action verdict; OPS sought the Election Commission

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ. பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்தது.

High Court action verdict; OPS sought the Election Commission

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று (18.03.2024) அளித்த தீர்ப்பில், “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தரத் தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இடைக்கால நிவாரணமாக மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) கட்சி சார்பாக படிவம் ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் எனவும் அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.