Skip to main content

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 600 கிலோ குட்கா பறிமுதல்; மளிகை வியாபாரி கைது!

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

dharmapuri district police raid seizured person arrested

 

தர்மபுரி அருகே, வீட்டிற்குள் 600 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்த மளிகை வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி சுற்றுவட்டாரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறை எஸ்.பி. கலைச்செல்வனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

 

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி அதியமான்கோட்டை காவல்நிலைய காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் காவல்துறையினர், பெரியாம்பட்டி, கலப்பனநாயக்கனஹள்ளி கிராமங்களில் கடைகள், சந்தேகத்திற்கிடமான நபர்களின் கிடங்குகள், வீடுகளில் சோதனை நடத்தினர். 

 

அப்போது ராஜசேகர் (வயது 41) என்பவருடைய வீட்டில் நடத்திய சோதனையில், அங்கு குட்கா பொட்டலங்களை சிறு சிறு மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர், மளிகை பொருள்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருவதும், அத்துடன் குட்கா பொருள்களையும் மற்ற சிறு சிறு கடைகளுக்கு விநியோகம் செய்து வந்ததும் தெரிய வந்தது. 

 

அவருடைய வீட்டில் இருந்து 20 சிறு சிறு மூட்டைகளில் பதுக்கப்பட்டிருந்த மொத்தம் 600 கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ராஜசேகரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்