/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dharmapuri_5.jpg)
தர்மபுரி அருகே கணவன், மனைவி கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகள் பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தனிப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 80). இவருடைய மனைவி சுலோச்சனா (வயது 70). இவர், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டனர். அதனால் பில்பருத்தியில் கணவன், மனைவி மட்டும் தோட்டத்துடன் கூடிய வீட்டில் தனியாக வசித்துவந்தனர். இரவில் கணவன், மனைவி இருவரும் வீட்டு முற்றத்தில் கட்டிலில் படுத்துத் தூங்குவது வழக்கம். இந்நிலையில், ஜூலை 12ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் அவர்கள் இருவரையும் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஆய்வாளர்கள் பாலமுருகன், சிவசங்கரன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.உடற்கூராய்வில் கிருஷ்ணன், சுலோச்சனா ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதன் பின்னர் கிருஷ்ணனை மட்டும் கழுத்தைக்கத்தியால் அறுத்துள்ளது தெரியவந்துள்ளது.
கொலையுண்ட தம்பதிக்கு தோட்டத்தில் 2 வீடுகள் இருக்கின்றன. தோட்டத்தின் முகப்பில் உள்ள வீட்டில் தம்பதியினர் வழக்கமாக சமைத்து சாப்பிட்டுவிட்டு, இரவில் தூங்கும்போது மட்டும் தோட்டத்தின் நடுவில் உள்ள வீட்டிற்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று, வீட்டின் முற்றத்தில் படுத்திருந்த கிருஷ்ணன் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து தோட்டத்தின் பின்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்துள்ளனர். சத்தம் கேட்டு எழுந்து வந்த சுலோச்சனாவையும் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.
எனினும், கொலையான தம்பதியின் வீட்டில் இருந்து நகை, பணம் உள்ளிட்ட பொருள்கள் எதுவும் திருடு போகவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களுடைய தோட்டத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள், உள்ளூர்க்காரர்கள், உறவினர்கள் யாராவதுதான் அவர்களை நெருக்கமாக கண்காணித்துக் கொலையை அரங்கேற்றியிருக்க வேண்டும் என்றும் தனிப்படை காவல்துறையினர் கருதுகின்றனர்.
கிட்டத்தட்ட கொலையாளிகளை நெருங்கிவிட்டதாக தனிப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த வழக்கு முடிவுக்குவரும் என்றும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)