தர்மபுரி: மசாஜ் தொழிலாளி அடித்துக் கொலை! காவல்துறை விசாரணை!!

dharmapuri district hogenakkal labour incident police investigation

ஒகேனக்கல்லில் மசாஜ் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த மர்ம நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடியைச் சேர்ந்தவர் துரை (50). இவர், கடந்த 30 ஆண்டுகளாக ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் செய்து விடும் தொழில் செய்து வந்தார். அவ்வப்போது, ஒகேனக்கல் காவிரியில் பரிசலும் ஓட்டி வந்தார்.இவர் மூன்று முறை திருமணம் செய்திருக்கிறார். கருத்து வேறுபாடுகள் காரணமாக மூன்று மனைவிகளும் பிரிந்து சென்று விட்டனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, விபத்தில் கால் ஊனமடைந்த துரை, அதன்பின் குடி போதைக்கு அடிமையானார்.

கடந்த வெள்ளிக்கிழமை (மே 8), ஒகேனக்கல்லில் சிலருடன் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, ஆட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய துரை, சனிக்கிழமை காலையில் சத்திரம் பகுதியில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் டிஎஸ்பி மேகலா, ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் தண்டபாணி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காகபென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சீட்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், அன்று நள்ளிரவு நேரத்தில் துரையை அடித்துக் கொலை செய்து, சடலத்தைக் கோயில் சத்திரத்தில் வீசிவிட்டுச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

தலைமறைவான கொலையாளிகளைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஊரடங்கால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் மூடப்பட்டுள்ள நிலையில், மசாஜ் தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

dhamapuri HOGENAKKAL FALLS incident Police investigation
இதையும் படியுங்கள்
Subscribe