Skip to main content

முடிவுக்கு வந்த 'கரோனா' விடுமுறை; ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

dharmapuri district, hogenakkal falls tourists


கரோனா தொற்று அபாயம் காரணமாக ஓராண்டாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று (பிப். 8) கல்வி நிலையங்களில் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்படுகின்றன.

 

இனி வாரத்தில், திங்கள் முதல் சனி வரை 6 நாள்கள் கல்வி நிலையங்கள் இயங்கும் என்பதால், நீண்ட விடுமுறையின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (பிப். 7) ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

 

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல், பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். சொந்த மாவட்டம் மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்தும் வார விடுமுறை நாள்களில் ஒகேனக்கல் அருவிகளில் குளித்து மகிழ வருகை தருவார்கள்.

 

ஒகேனக்கல், சுற்றுலாத் தலம் மட்டுமின்றி சினிமா படப்பிடிப்புகள் நடக்கும் இடமுமாகவும் விளங்குகிறது. முதன்மை அருவி, சினி அருவி மட்டுமின்றி தொங்கும் பாலம், முதலை பண்ணை, மீன் காட்சியகமும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து படைப்பவை.

 

எல்லாவற்றுக்கும் மேல், இருபுறமும் உயர்ந்துநிற்கும் பாறைகளுக்கு இடையே கர்நாடகா மாநில எல்லை வரை காவிரியில் உற்சாகமாகப் பரிசல் சவாரி செய்வதும் சுற்றுலாப் பயணிகளுக்கு அலாதி மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும். வித்தியாசமான அனுபவங்களை ரசிக்கும் சுற்றுலாவாசிகளின் தவிர்க்க முடியாத இடங்களுள் ஒகேனக்கலுக்கும் முக்கிய இடம் உண்டு. 

 

கரோனா தொற்று அபாயம் காரணமாக கிட்டத்தட்ட ஓராண்டாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. ஒகேனக்கல் சுற்றுலாத்தலமும் மூடப்பட்டு இருந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு அண்மையில்தான் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில், பிப். 8- ஆம் தேதி (திங்கள்) முதல் 9 முதல் 12- ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் என்றும், இனி கல்வி ஆண்டு முடியும் வரை வாரத்தில் 6 நாள்களும் வகுப்புகள் நடக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து நீண்ட விடுமுறை காலத்தின் கடைசி சனி, ஞாயிறு தினங்களான நேற்றும், நேற்று முன்தினமும் ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். 

 

இனி பொதுத்தேர்வு முடிவும் வரை விடுமுறை கிடைக்காது என்பதால் இந்த விடுமுறை நாள்களை சுற்றுலாவாசிகள் அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் மீன் பிடித்து அங்கேயே சுவையாகச் சமைத்துச் சாப்பிட்டும் ரசித்து மகிழ்ந்தனர்.
 

cnc

 

சுற்றுலாப் பயணிகள் வருகையால் காலை முதலே டிபன் கடைகள், சாலையோர கடைகள், காய்கறி, பழக்கடைகளில் வியாபாரம் களைகட்டியது. மீன் விற்பனையும், விலையும் கொஞ்சம் அதிகரித்துக் காணப்பட்டது.

 

ஒகேனக்கலுக்கு வரும் ஆண்களில் பெரும்பாலானோர் அங்கு மசாஜ் செய்து கொள்வதும் வாடிக்கை. அதனால் நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் மசாஜ் செய்து கொண்டனர். இதனால், மசாஜ் செய்துவிடும் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். சமையல் கலைஞர்களும் உற்சாகமடைந்தனர். 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல்துறை கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. ஒகேனக்கலுக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,500 கன அடியாக இருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 Increase in water flow in ohenakkal

 

காவிரியில் நீர் திறப்பு நேற்று அதிகரித்து இருந்த நிலையில், தற்போது தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

 

காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரைக் கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையில் இருந்து கர்நாடக அரசு விடுவித்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து விடுவிக்கப்பட்ட நீர் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 9,500 கன அடி நீர்வரத்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை 8,500 கன அடியாக குறைந்த நிலையில் மீண்டும் உயர்ந்து தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.

 

நேற்று காலை மேட்டூர் அணைக்கு 2,500 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 9,345 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. அண்மையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவைக் கண்டிருந்த நிலையில் மீண்டும் உயரத் தொடங்கி வருகிறது. முன்னதாக மேட்டூர் அணை நீர்மட்டம் 31.31 அடியில் இருந்த நிலையில் தற்போது 33.10 அடியாக அதிகரித்து உள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 8.81 டிஎம்சியாக உள்ளது.

 

 

 

Next Story

உண்ட வீட்டுக்கு ரெண்டகம்... மாவு மில்லில் 3 கோடி ரூபாய் மோசடி!

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

3 crore rupees fraud in flour mill!

 

தர்மபுரி அருகே, தனியார் மாவு அரைக்கும் ஆலையில் தயாரிக்கப்படும் மாவைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து 3 கோடி ரூபாய் மோசடி செய்த 8 ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் தென்னரசு (வயது 39). இவர், சொந்தமாக மாவு அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவர், மாவட்ட குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்துள்ளார். 

 

அந்த புகாரில், ''என்னுடைய உறவினர் எழில் பிரகாஷ் என்பவரைக் கடந்த 2018- ஆம் ஆண்டு, மாவு அரைக்கும் ஆலையில் மேலாளராக நியமித்தேன். ஆனால் கடைகளுக்கு அனுப்பி வைக்கக் கூடிய மாவைக் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த மோசடியில் மேலும் 7 பேருக்குத் தொடர்பு உள்ளது. இதன் மூலம் 3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியுள்ளார். 

 

அதன்பேரில், காவல்துறையினர் எழில் பிரகாஷ் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.