ஓட்டுக்காக பணம் பதுக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம்!

dharmapuri district government school teacher suspended

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 45). மாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க. ஆதரவாளராகவும் உள்ளார்.

இவர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவீட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், மார்ச் 29ஆம் தேதி அவருடைய வீட்டுக்குப் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விரைந்தனர்.

அதிகாரிகள் வருவதைப் பார்த்த குமார், பணப்பையை வீட்டுக்குப் பின்பக்கமாக வீசி எறிந்தார். அங்கு தயாராக இருந்த அவருடைய உறவினர் நேதாஜி என்பவர் பணப்பையை எடுக்க முயன்றார். அப்போது அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர் குமார், நேதாஜி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் சரவணன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். விசாரணையில், அந்தப் பணப்பையில் 16.50 லட்சம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுப்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, தேர்தல் விதிகளை மீறியதாக அரசுப் பள்ளி ஆசிரியர் குமாரை, தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, செவ்வாய்க்கிழமை (மார்ச் 30) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் தர்மபுரி மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dharmapuri district govt school money teacher tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe