Skip to main content

கரோனா யுத்தம்! பழி போடும் மாவட்ட நிர்வாகம்! அதிர்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

 

d

 

கரோனா தொற்று இல்லாத சமூகமாக உலகம் மாற வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் அவரவர்களின் சூழல்களுக்கேற்ப போராடி வருகின்றனர். ஆனால், அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் ஜீரணிக்க முடியாதவைகளாக இருக்கின்றன. கரோனாவை வைத்து ஒரு மாவட்டத்தை பழிவாங்க மற்றொரு மாவட்ட அதிகாரிகள் திட்டமிட்ட விவகாரம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
  

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தங்கள் மாவட்டத்திற்குள் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கவும், தொற்று பாதிக்காத நிலைமையை உருவாக்கவும் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன. அந்த வரிசையில் தருமபுரி மாவட்டமும் அடங்கும்.  

                                
இந்தியாவில் முதன் முதலாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியான உடனே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தடை உத்தரவைப் பிறப்பித்தது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகம். மேலும், தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் அரசின் பல்வேறு துறைகளை களமிறக்கி தற்போது வரை ஓய்வின்றிச் செயல்பட்டு வருகின்றனர் மாவட்ட அதிகாரிகள். 
  

தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகரின் பிரதான பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு கரோனா பாதித்தவர்களுக்கான சிகிச்சை அளிக்கும் சிறப்பு பிரிவு இயங்கினால், மருத்துவமனையைச் சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அச்சம் மிகுந்த சூழல் உருவாகும். அதைக் கருத்தில் கொண்டு நகரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில், அப்பால் செட்டிக்கரை பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சிறப்பு சிகிச்சை பிரிவை அமைத்தது மாவட்ட நிர்வாகம். 

  

தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களிலிருந்து, தொற்று அறிகுறி அல்லது சந்தேகத்துடன் யார் வந்தாலும் இங்குப் பரிசோதனைகளும், சிகிச்சையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தையும், வட மாநிலங்களையும் இணைக்கும் பிரதான தேசிய நெடுஞ்சாலை தருமபுரி நகருக்கு அருகாமையில் அமைந்துள்ளது. எனவே, சந்தேகம் ஏற்படும் சூழலிலுள்ள லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   

             
இப்படிப்பட்ட ஒரு சோதனையில் தான், தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகிலுள்ள எலவடை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சையில் சேர்த்ததுடன், அவரது குடும்பத்தார், அவரது கிராமத்தில் வசிப்பவர்கள் என பலருக்கும் கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. நல்லவேளையாக யாருக்கும் தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டது.
 

அதேசமயம், அந்த லாரி ஓட்டுநர் சென்று வந்த இடங்கள், சந்தித்த நபர்கள் உள்ளிட்ட பயண விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், அவர் சென்று வந்த பகுதிகளின் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல் நிர்வாகங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது. அந்த வரிசையில், தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட மொரப்பூர் பகுதி லாரி ஓட்டுநருடன் மாற்று ஓட்டுநராக அதே லாரியில் சென்று வந்த நபர் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டது. 

 

அந்த நபர்,  தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் நரிப்பள்ளி அருகிலுள்ள, தன் தாய்வழி பாட்டியின் கிராமத்தில் சில காலம் வசித்துள்ளார். அப்போது அவர் ஆதார் அட்டை பெற்றுள்ளார். ஆனால், அந்த நபருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகிலுள்ள கிராமம் தான் சொந்த ஊர். அங்குதான் குடும்பத்துடன் அவர் வசித்து வருகிறார். இருப்பினும், அவருக்கும், அவர் மூலம் பிறருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. தலைமறைவாகிவிட்ட அந்த மாற்று ஓட்டுநரை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் பணியும் மேற்கொள்ளப்பட்டது. 

                           
இந்தத் தேடுதல் பணியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கி இருந்த அந்த ஓட்டுநரை அங்குள்ள அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவரது மாவட்டம் கிருஷ்ணகிரி எனத் தெரிய வந்தது. கிருஷ்ணகிரியில் அவர் வசிக்கும் அனைத்து விவரங்களையும் அவரே தெரிவித்தார். உடனே கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரிகளிடம் அந்த ஓட்டுநரை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்தது. 
                           

உண்மை நிலை இப்படி இருக்க, தருமபுரி மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டும், உள் நோக்கத்துடனும் மாற்று ஓட்டுநரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒப்படைத்ததாகவும், அந்த மாற்று ஓட்டுநரின் பூர்வீகம் தருமபுரி மாவட்டம்தான் என்றும் தகவல்களைப் பரப்பினர் கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரிகள். கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் மறைமுக ஏற்பாட்டில், தொழில் நுட்ப பரப்புரையாளர்களின் உதவியுடன் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு அந்தத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. 


மேலும், தமிழகத்தில் கரோனா தொற்றே பாதிக்காத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வரும் நிலையில், அந்த நற்பெயரையும், ஆரோக்கியமான சூழலையும் சீர்குலைக்கும் வகையில் தருமபுரி மாவட்ட அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுகின்றனர் என்றும் அவர்கள் அவதூறு பரப்பினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக, அந்த மாற்று ஓட்டுநருக்கோ, அவரது குடும்பத்தார் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கோ கரோனா தொற்று இல்லை எனச் சோதனையில் தெரிய வந்துள்ளது. இது, மாவட்ட எல்லைகளைத் தாண்டி, சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் தகவல். 
   

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், பணியாளர்களும் கரோனா வைரஸ் தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பிரதான நோக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டுதான் பணியாற்றி வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட ஒரு மாவட்டத்திலோ, மாவட்ட நிர்வாகமும் அந்த நிர்வாகத்துக்கு பல்லக்கு தூக்கும் சிலரும் இணைந்து வெளியிடும் அதீத கற்பனைகள் மற்றவர்களால் எண்ணிப் பார்க்கக் கூட முடியாதவையாக இருக்கின்றன. புத்திசாலித்தனமாக யோசித்து செயலாற்றுவதாக எண்ணிக் கொண்டு,  நாட்டில் அசாதாரண சூழல் நிலவும் நேரத்தில் இவர்கள் செயல்படும் விதம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்குவதாக இருக்கிறது. 


இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறி சமீபத்தில் கண்டறியப்பட்டது. அந்த மாவட்டத்திலேயே 38 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட அந்த நபருக்குத் தொற்று அறிகுறி ஏற்பட்டதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பு எதுவும் முறையாக வெளியாகவில்லை. பிறகு, அவரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளைச் சென்னையிலுள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்தபோது தொற்று இல்லை என ரிசல்ட் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் மிகுந்த அக்கறையுடன் விளம்பரப்படுத்தப்பட்டது. 
 

http://onelink.to/nknapp

 


ஆனால், அந்த நபர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைக்கான சிறப்பு பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தொற்றே இல்லாத நபருக்கு கரோனா பிரிவில் எதற்காக சிகிச்சை என்பது அந்த மாவட்ட நிர்வாகத்துக்கும், அங்குள்ள அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் தான் வெளிச்சம்.  
 

 

ஆக,  ‘’மரத்தின் நுனிக் கிளையில் உட்கார்ந்து கொண்டு அடி கிளையை  வெட்டும் வேலைகளை, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும், அங்குள்ள சில அதிகாரிகளும், இவர்களுக்கு பல்லக்கு தூக்கும் சிலரும் செய்து வருகின்றனர். கரோனா விவகாரத்தில் நடக்கும் நாலாந்தர நடவடிக்கைகளைக் காலம் விரைவில் அம்பலப்படுத்தும்‘’ என்கிறார்கள் இரு மாவட்டங்களில் நடக்கும் உண்மை நிலைகளை அறிந்துள்ள தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள். 

                    
கரோனா விவகாரத்தில் ஒரு மாவட்டத்தின் மீது மற்றொரு மாவட்டம் பழி போடும் இந்த விவகாரம்தான், கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் கடந்து கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.