Advertisment

தர்மபுரி அருகே அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலி; கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரியால் கோரம்!

Advertisment

தர்மபுரி அருகே, 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரியால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய இரு மாவட்டங்களின் எல்லையாக தொப்பூர் கணவாய்ப் பகுதி உள்ளது. சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையான இந்தப் பகுதி, அடிக்கடி விபத்துகள் நடக்கும் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தொப்பூர் கணவாய் அருகே வாகனங்கள் செல்லும்போது குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்று நிரந்தரமாக எச்சரிக்கை அறிவிப்பு பலகையும், இரவில் ஒளிரக்கூடிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. ஆனாலும், தொப்பூரில் கோர விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்றும் (டிச. 12) அதே இடத்தில் கோர விபத்து அரங்கேறியுள்ளது. அதன் முழு விவரம் வருமாறு.

Advertisment

வேலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு சரக்கு லாரி இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை மாலை (டிச. 12) 3 மணியளவில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி தொப்பூர் கணவாய் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், ஒரு மைல் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் படிப்படியாகப் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு வாகனங்கள் எறும்பு ஊர்வது போல மெதுவாகச் சென்று கொண்டிருந்தன.

இந்நிலையில், ஆந்திரமாநிலத்தில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று தொப்பூர் கணவாய்ப்பகுதி அருகே வந்தபோது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அந்த இடம் சரிவான பகுதி என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் வேகமாக முன்னோக்கிச் சென்ற லாரி, முன்னால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.

கண்டெய்னர் லாரி பலமாக மோதியதில் ஒவ்வொரு வாகனமும் அதற்கு முன்னால் சென்ற மற்ற வாகனங்களின் மீது தாறுமாறாக மோதி பெரும் விபத்துஉண்டானது. மொத்தம் 12 கார்கள், 2 டாரஸ் லாரிகள், ஒரு வேன் என மொத்தம் 15 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக ஏறிக்கொண்டு நின்றன. சில கார்கள் அப்பளம்போல் நொறுங்கின.

இந்தப் பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த ஒருவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப்பரிசோதனையில், அந்த நபர் வரும் வழியிலேயே இறந்துவிட்டது தெரிய வந்தது. இந்த விபத்தில் மொத்தம் நான்கு பேர் இறந்துள்ளனர். இறந்த நபர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. பலியான நால்வரும் ஆண்கள். உயிரிழந்த மதன்குமார் என்பவரிடம் ஐந்து சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். எக்ஸ்கவேட்டர் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, விபத்தில் உருக்குலைந்த வாகனங்களை மீட்கும் பணிகள் நடந்தன. மேலும், மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இந்த விபத்தால் சுமார் 6 கீ.மீ. தொலைவுக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. போக்குவரத்துச் சீரடைய 5 மணி நேரத்துக்கும் மேலானது.

accident dharmapuri thoppur high way
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe