இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு; டிஜிபி அதிரடி உத்தரவு!

dgp-shankar-jiwal

நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு அருகே உள்ள பகுதியில் கோவிலின் செயல் அலுவலகத்தில் வைத்துக் குற்றப்பிரிவு போலீசார் அஜித்குமாரை பைப்புகளால் தாக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த பகுதியில் பைப்புகள் உடைந்து சிதறிக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிமுக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்த சம்பவம் தொடர்பாகத் தனிப்படை காவலர்கள் 6 பேரை இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு, இந்த சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரையில் நீதிபதி வேங்கடப்பிரசாத் நேரடியாக அஜித்குமாரின் தம்பி, அக்கா மற்றும் அவரது அம்மா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடமும், உறவினர்களிடமும் விரிவான விசாரணை நடத்தினார். இதற்கிடையில், அஜித்குமார் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. நீதிபதி வேங்கடபிரசாத், அஜித்குமாரின் உடலில் இருந்த காயங்கள் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டார். 

இத்தகைய சூழலில் தான், உயிரிழந்த இளைஞர் அஜித்தின் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அஜித்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அது தொடர்பான முதற்கட்ட அறிக்கை வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவர் கடும் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும், குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பதாகவும், உட்புற உறுப்புகளில் பலவிதமான காயங்கள் ரத்த கசியல் போன்ற மரணிக்கக் காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாகவும் முதற்கட்டமாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாகத் தொண்டைப் பகுதியில் ஏற்பட்ட கொடுங் காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

மேலும், உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக் கசிவு போன்றவை மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு பிரேதப் பரிசோதனை 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், அஜித்குமார் மீது நடந்த பிரேதப் பரிசோதனை 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். எனவே சிசிபிசிடி போலீசாரின் விசாரணைக்குப் பின்னர் லாக்கப் டெத் தொடர்பாக அடுத்த கட்ட வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தனிப்படை போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்டார் என பல்வேறு குற்றச்சாட்டுகள் காவல்துறையினர் மீது வைக்கப்பட்டு வரும் நிலையில இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள தகவல்   முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

CBCID dgp Investigation madurai shankar jiwal sivagangai
இதையும் படியுங்கள்
Subscribe