புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலரான அ.தி.மு.க பிரமுகர் ஜபகர்அலி கடந்த ஜனவரி மாதம் கல்குவாரி நடத்துபவர்களால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் குவாரி முதலாளிகள் மற்றும் லாரி உரிமையாளர், லாரி ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குவாரி முதலாளிகளின் செல்போனில் இருந்து சில செல்போன் எண்களை அங்கிருந்த போலீசார் மூலம் அழிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதனால் குவாரி முதலாளிகளிடம் செல்போனில் பேசியவர்களின் பட்டியல் பெறப்பட்டு அதில் சில போலீசாரின் நம்பர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பிறகு, ஜபகர் அலி கொல்லப்பட்ட சம்பவத்தில் குவாரி முதலாளிகளுடன் போலீசாரின் தொடர்புகள் பற்றி விசாரிக்க ஏ.டி.எஸ்.பி முரளிதரன் நியமிக்கப்பட்டு விசாரணை செய்த போது எஸ்.பி எஸ்.ஐ பிரபாகரன் குவாரி முதலாளிகளுடன் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள கனிமவளக் கொள்ளையர்களுடன் மாதத்தின் முதல் வாரத்தில் பேசியுள்ளதும் தெரிந்தது. அதேபோல, அறந்தாங்கியில் பணியில் இருந்த எஸ்.ஐ திருட்டு மணல் லாரியை பிடித்த போது அந்த லாரியை விடச் சொல்லி எஸ்.பி எஸ்.ஐ பேசிய ஆடியோ பதிவை அறந்தாங்கி எஸ்.ஐ விசாரனை அதிகாரியான ஏ.டி.எஸ்.பி முரளிதரனிடம் ஆதாரமாக கொடுத்துள்ளார். விசாரணை முடிந்து விசாரணை அறிக்கையை ஏ.டி.எஸ்.பி கொடுத்துள்ளார்.
இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் புதுக்கோட்டை எஸ்.பி, எஸ்.ஐ பிரபாகரன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் செல்வேந்திரன், ராமபாண்டியன், பாலசுப்பிரமணியன் (இவர் தற்போது மீன்சுருட்டி காவல்நிலைய காவலராக உள்ளார்) ஆகிய 4 பேரையும் தென் மண்டலத்திற்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதனால் மத்திய மண்டலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.