/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/32_100.jpg)
சிதம்பரம் ஆன்மீக சுற்றுலா நகரமாகும். இங்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் இங்குள்ள நடராஜர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம், சாமியார்பேட்டை கடற்கரை பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ரசித்து விட்டு செல்கிறார்கள். இதன் காரணமாக சிதம்பரம் நகரத்திற்கு பேருந்து, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். வாகனம் நிறுத்த சரியான இடம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த சூழலில், தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வழக்கத்தை விட மிக அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செல்வதற்கு வெளிமாநிலங்களில் இருந்தும் நெடுந்தூரத்தில் இருந்து இரவு நேரத்தில் பயணம் செய்து அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பலபேர் நள்ளிரவே வந்து தங்கிவிடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனத் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/33_106.jpg)
இது குறித்து கர்நாடக மாநிலத்திலிருந்து நடராஜர் கோயிலுக்கு வந்த ஆன்மீக பக்தர் லட்சுமிதேவி கூறுகையில், “சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருவதை நாங்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறோம். இரவு முழுவதும் பேருந்தில் பயணம் செய்து கோவிலுக்கு வந்தோம். கோவிலுக்கு செல்வதற்கு முன் குளித்துவிட்டு செல்ல வேண்டும் என கீழவீதியில் உள்ள நகராட்சி கழிவறை மற்றும் குளியல் அறைக்கு சென்றோம். அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் கழிவறைக்கும், குளிக்க செல்வதற்கு காத்திருக்கின்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.
குளிப்பதுகூட தாமதமாகலாம் உடனடியாக கழிவறைக்கு செல்லவேண்டுமே என அந்த அவஸ்தையை தாங்கி கொண்டு 50 நிமிடத்திற்கு மேலாக கூட்டத்தில் நின்று இயற்கை உபாதை கழித்து சென்றோம். நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கழிவறை சுகாதாரம் இல்லாமல் ஓட்டை உடைசலாக உள்ளது. அங்குள்ளவர்கள் பக்தர்களிடம் மரியாதை குறைவான வார்த்தையால் பேசுகிறார்கள். அதே நேரத்தில் தனியார் மூலம் அமைக்கப்பட்டுள்ள கட்டண கழிவறையில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். எனவே பக்தர்கள் இதனால் மிகவும் அவதி அடைகிறோம். தமிழக அரசு நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன்களை கருதி அவர்களுக்கு குறைந்த விலையில் இயற்கை உபாதை மற்றும் குளியல் அறைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தனியார் கழிவறை மற்றும் குளியலறைக்கு கண்டனத்தை நிர்ணயம் செய்யவேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/31_110.jpg)
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, “பேருந்தில் 50 பேர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்தோம். அங்கு பகலில் தரிசனம் செய்துவிட்டு நடராஜர் கோவிலில் தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் வந்தோம். இங்கு தனியார் விடுதியில் தங்குவதற்கு ஒருநபருக்கு குறைந்த பட்சம் ரூ 1000 வசூல் செய்கிறார்கள். அதனால் அனைவரும் பேருந்திலே அமர்ந்தவாறு தூங்கிவிட்டோம். பின்னர் காத்திருந்து வெளியே உள்ள கழிவறையில் குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றோம்.
கோயில் உள்ளே சாமியை தரிசிக்கத் தீட்சிதர்கள் ரூ.100 முதல் வசூல் செய்கிறார்கள். இதனை வசூல் செய்யும் கோயில் நிர்வாகம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவில்லை. ஒரு நாளைக்கு பல்லாயிரகணக்கில் பக்தர்கள் வந்து செல்லக்கூடிய இந்த கோவிலில் கோவில் நிர்வாகம் பணத்தை மட்டுமே வாங்குகிறது. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுத்து வருகிறது. எனவே கோவில் நிர்வாகம் காசை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.
அதே நேரத்தில் தமிழக அரசு பக்தர்களின் நலம் கருதி கூடுதலாக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்களுக்கு சிரமம் இன்றி கழிவறை, குளியலறை, ஓய்வு அறை வசதிகளை குறைந்த கட்டணத்தில் செய்து தர வேண்டும். பணம் இருப்பவர்கள் தனியார் தங்கும் விடுதி, சொகுசு அறைகளில் தங்கி விடுகிறார்கள். பல்வேறு ஏழை மக்கள் சிதம்பரம் நகரத்திற்கு சென்றாலே புண்ணியம் என வந்து செல்கிறோம். எங்களுக்கு கழிவறை செல்ல முடியாமல் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே, இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)