
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் கோவில் முன்பு உள்ள தடாகத்தின் மையத்தில் 82 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை நின்ற கோலத்தில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் மிக உயரமான பிரமாண்ட சிலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தலைமைப் புலவர் நக்கீரனின் தர்க்கத்தில் உண்மையின் பக்கம் நின்ற சிவன் மெய்நின்றநாதராக எழுந்து நிற்கும் இடமாக இந்த தலம் போற்றப்படுகிறது. மேலும், இங்குள்ள சிவனுக்கும் அம்பாளுக்கும் இன்றுவரை தமிழ் பெயர் மட்டுமே உள்ளது என்ற சிறப்பும் உள்ளது. அதனால் தமிழ்நாடு முழுவதும் இருந்து சிவபக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். அதிலும் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகிலேயே கோயில் அமைந்துள்ளதால் போக்குவரத்து பிரச்சனையின்றி பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வழக்கம்போல மகா சிவராத்திரி நாளில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் என தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. மாலை 5 மணிக்கு பிறகு ஆயிரக்கணக்கில் தொடங்கிய பக்தர்கள் கூட்டம் நேரம் ஆக ஆக பல ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர். சிவராத்திரிகாக வந்த பக்தர்கள் தடாகத்தில் உள்ள பிரமாண்ட சிவன் சிலையை சுற்றி வந்து மெய்நின்றநாதரை வழிபட்டு செல்ல நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக உணவும் தண்ணீர் வழங்கப்படுகிறது. கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாரதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் நடந்து வருகிறது. சிவலிங்கம், ஒப்பிலாமணி அம்பிகை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். வழிபாட்டிற்காக வரும் பக்தர்களின் நெரிசலை தவிர்க்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையாக அனுமதிக்கப்படுகின்றனர். சிவராத்திரி நாளில் ஆண்டுக்காண்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.