developements in cbi probe of sathankulam case

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூன்று காவலர்களை சாத்தான்குளத்துக்கு அழைத்து வந்து சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்களைச் சம்பவம் நடந்தது தொடர்பாக நடித்துக்காட்டச் சொல்லி விசாரணை நடத்தினர்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீஸார் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். அவர்கள்மரணம் அடைய, அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்குள்ளான காவலர்களைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றது. அதேபோல பென்னிக்ஸ் உறவினர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து ஆகியோர் நேற்று சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், மூன்று போரையும் சம்பவம் குறித்து தனித்தனியாக நடித்தும் காட்டச்சொல்லி அதனை வீடியோபதிவு செய்தனர்.