சர்வதேச தொல்லியல் தினத்தை முன்னிட்டு அறிவோம் வரலாறு, காப்போம் தொன்மையை என்ற நோக்கில் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் தே.கல்லுப்பட்டியில் வரலாற்று மரபு நடை தொடங்கப்பட்டது.பரணிதரன் அனைவரையும் வரவேற்றார்.

Advertisment

இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது,

Devancurichi Mountain - A Historical Treasure

தே.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி மலை ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதியாக விளங்குகிறது. இங்கு 1976 இல் மத்திய தொல்லியல்துறை நடத்திய அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், கற்கருவிகள் கண்டெடுக்கப்படுள்ளன. அந்த எச்சங்கள் இன்றளவும் பாதுகாப்பின்றி காணப்படுகின்றன.

Advertisment

இம்மலையில் சமணத் துறவிகள் வாழ்ந்த தடயங்களும் இருக்கின்றன. சமணத் துறவிகள் கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதற்கு ஆதாரமாக சமணப்புடவும், சமணப் படுக்கைகளும், மகாவீரரின் நின்ற மற்றும் அமர்ந்த நிலையிலான சிற்பங்களும் இங்கு உள்ளன. சமய மறுமலர்ச்சி காலத்திற்குப் பின் இவை சைவ மதத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Devancurichi Mountain - A Historical Treasure

கி.பி.13-ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் இங்கு சிவாலயம் கட்டப்பட்டது என்பதற்கு கோயில் சுவரில் உள்ள கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. இக்கோயிலின் முந்தைய பெயர் திருவாற்றேசவரமுடைய நாயனார் கோயில் என்றும், ஊரின் பழைய பெயர் செங்குன்ற நாட்டு பெருங்குன்றத்தூர் என்றும் கோயில் கோட்டைச் சுவரில் உள்ள துண்டுக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கருவறை பாண்டியர் காலத்திலும், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை நாயக்கர் காலத்திலும் கட்டப்பட்டுள்ளன.

Advertisment

Devancurichi Mountain - A Historical Treasure

கோயிலைச் சுற்றி 8 துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயில் பூஜைக்கும், விளக்கு ஏற்றுவதற்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட விவரம் இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. கோயிலின் நுழைவு வாயிலில் கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் காணப்படுகிறது. மலைப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் புலிகளிடமிருந்து மக்களைக் காத்து உயிர் நீத்த வீரனுக்கு எடுக்கப்பட்ட புலிகுத்திப்பட்டான் கல்லாக இது உள்ளது. இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்திட்டையும் உள்ளது. இம்மலையின் உச்சியில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயில் உள்ளது. ஒரே இடத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளது இவ்வூருக்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது என்றார்.

Devancurichi Mountain - A Historical Treasure

நிகழ்ச்சியில் ரெங்கசாமி நன்றி கூறினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரியச் சிறப்புள்ள இடங்களைப் பார்வையிட்டனர்.