தேவநாதனுக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

Devanathan was sentenced to court custody

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சிவகங்கை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிட்டவர் தேவநாதன் யாதவ். இவர் சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதி தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட், நிதி நிறுவனத்தின் பொறுப்பாளராகப் பதவி வகித்து வருகிறார். இவர் மீது வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை, வட்டி என ரூ.525 கோடியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க மறுப்பது தொடர்பாக ஏராளமான வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்திருந்தனர். இந்த புகார்கள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இத்தகைய சூழலில் தான் இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள நேற்று (13.08.2024) வந்துள்ளார். இவரைப் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இவர் கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு புதுக்கோட்டை வழியாகத் திருச்சி செல்வதை அறிந்த பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், புதுக்கோட்டை மாவட்ட போலீசார் உதவியுடன் காரைக்குடி - திருச்சி பைபாஸ் சாலையில் கட்டியாவயல் அருகே வந்த போது கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

Devanathan was sentenced to court custody

இந்நிலையில் தேவநாதன் யாதவ் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வால்டேயர் அமர்வில் இன்று (14.08.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குணசீலன், மகிமிநாதன் ஆகியோரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தேவநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ் வாதிடுகையில், “தேவநாதனின் வயது முதிர்வு மற்றும் முதுகு தண்டுவட பிரச்சனையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் எந்த மோசடியும் செய்யவில்லை. அவரது கைது சம்பவம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். இதுவரை 100 கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எங்கும் தலைமறைவாகவில்லை” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து காவல்துறை தரப்பில் வாதிடுகையில், “பிரசாத் என்பவர் அளித்த ஒரு புகாரின் பேரில் தான் தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இன்னும் 144 புகார்கள் நிலுவையில் உள்ளன. இந்த நிறுவனத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் பணம் செலுத்திப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி ஆகஸ்ட் 28ஆம் தேதி (28.08.2024) வரை என தேவநாதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.

Chennai court police
இதையும் படியுங்கள்
Subscribe