Devan Estate tiger caught in the eyes of travelers .. Foresters in intensive search!

Advertisment

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மூன்று பேரைக் கொன்ற புலி, கடந்த ஆறு நாட்களாக அங்குள்ள தேவன் எஸ்டேட்டில் பதுங்கியிருந்தது. அங்குப் பதுங்கியிருந்தபோது, அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. அதேசமயம், இது ஆட்கொல்லி புலியானதால், தேவன் எஸ்டேட் பகுதியில் இருக்கும் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஏழாவது நாளான இன்று (01.10.2021) அந்தப் புலி பதுங்கியிருந்த இடத்தில் அதைத் தேடுவதற்காகப் பணியிலிருந்த வனக் காவலர்கள் சென்றனர். அப்போது, தெப்பக்காட்டிலிருந்து மசினகுடி செல்லும் சாலையில், ஒரு புலி சோர்வான நிலையில் நடந்து சென்றதை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கண்டுள்ளனர். அதனை அவர்கள் தங்கள் செல்ஃபோன்களிலும் பதிவுசெய்துள்ளனர். மேலும், அது தொடர்பான தகவலும் வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர், ஏற்கனவே மசனக்குடி முதல் தேவன் எஸ்டேட் வரை பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அந்தப் புலி அவ்வழியாகக் கடந்து சென்றதற்கான புகைப்படங்கள் பதிவாகியுள்ளன.

Advertisment

மேலும், வனத்துறையினர் தேவன் எஸ்டேட் முதல் மசினகுடி வரையிலான தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், புலி சரியாகத் தேவன் எஸ்டேட்டிலிருந்து தெப்பக்காடு பகுதி வரை வந்துள்ளது பதிவாகியுள்ளது. ஆனால், மசினகுடியில் இருக்கும் தானியங்கி கேமராக்களில் புலி வந்ததற்கான புகைப்படங்கள் இல்லை. அதனால், தெப்பக்காடு பகுதியில் மயக்க ஊசி செலுத்தும் நிபுணர்களுடன் வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.