Skip to main content

செந்தில் பாலாஜி வழக்கின் மூன்றாவது நீதிபதி; சி.வி.கார்த்திகேயன் கொடுத்த முக்கியத் தீர்ப்புகள்...

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

details about third judge CV Karthikeyan in Senthil Balaji case

 

தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்த நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக நடைபெற்ற இந்த சோதனையில், செந்தில் பாலாஜி மிகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. சோதனை முடிவில், நள்ளிரவு சமயத்தில்.. மிகவும் பரபரப்புடன் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், குடும்பத்தினரின் கோரிக்கைக்கு இணங்க, அவருக்கு தனியார் மருத்துவமனையில் பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

 

இதற்கிடையே, செந்தில் பாலாஜியை சட்டவிரோத காவலில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வைத்துள்ளதாகக் கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.நிஷாபானு மற்றும் டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையின்போது காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை என செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் கொடுத்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், ‛‛நீதிமன்றக் காவலில் ஒருவர் இருக்கும்போது ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்வது விசாரணைக்கு ஏற்புடையது அல்ல. விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்காததாலேயே அவர் கைது செய்யப்பட்டார். இதில் எந்த விதிமீறலும் இல்லை. ஆகையால், ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என வாதிட்டார்.

 

கடந்த ஜூன் 27ம் தேதியே இருதரப்பு வாதங்களும் இந்த வழக்கில் நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. இரண்டு நீதிபதிகளும் தனித்தனியே தீர்ப்பை வாசித்தனர். அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி பரதசக்கரவத்தி, செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் செந்தில் பாலாஜி ஒரு நிமிடம் கூட கஸ்டடியில் இல்லை என்பதால், சிகிச்சை நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக கருத முடியாது எனவும் கூறினார். மேலும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு வழங்கினார். செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பு வாதத்தை முழுமையாக ஏற்ற மற்றொரு நீதிபதியான நிஷா பானு, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியைக் கைது செய்தது சட்டவிரோதம் என கூறினார். மேலும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

 

இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மூன்றாவது நீதிபதி கூறும் தீர்ப்புதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பாக அமையும் எனச் சொல்லப்பட்டது. அதன்படி, செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கில் நீதிபதி கார்த்திகேயன் வழங்கும் தீர்ப்புதான் உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பாக அமைய உள்ளது என்பதால் யார் அந்த சி.வி.கார்த்திகேயன் எனப் பலரும் தேடத் தொடங்கியுள்ளனர்.

 

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சி.வி.சிம்மராஜ சாஸ்திரி மற்றும் சரஸ்வதி எஸ். சாஸ்திரி ஆகியோரின் மகனாகப் பிறந்தவர் சி.வி.கார்த்திகேயன். பாரம்பரிய வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் குடும்பத்தில் ஆறாவது தலைமுறையாக பிறந்த இவரும் நீதித்துறையையே தனது எதிர்காலமாக தேர்ந்தெடுத்து அதில் நீதிபதியாக உயர்ந்துள்ளார். சென்னை, ராயபுரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பிரசன்டேஷன் கான்வென்ட்டில் ஆரம்பப் பள்ளிப் படிப்பையும், சென்னை ஆர்மேனியன் தெருவில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியிலும் படித்த இவர், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளியில் உயர்நிலைப் பள்ளியை முடித்துள்ளார். சென்னை அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வியை படித்துள்ளார்.

 

1989 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்த இவர், 2005 ஆம் ஆண்டு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் பயிற்சி நீதிபதியாக தனது பணியை தொடங்கியுள்ளார். பின்னர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தனது படிப்படியான அனுபவத்தால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்துள்ளார். மிகச் சிறந்த நீதிபதி என அனைவராலும் போற்றக்கூடிய சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜி வழக்கில் உள்ளே வந்துள்ள சம்பவம் மிகுந்த பரபரப்புடன் பார்க்கப்படுகிறது. நீதிபதியாக 18 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தான் எடுத்துக்கொண்ட வழக்குகளை இழுத்தடிக்காமல் விரைந்து தீர்ப்பு கூறியுள்ளார் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் அவரைப் பற்றி சொல்லப்படுகிறது.

 

கொரோனா காலகட்டங்களில் உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருந்த நேரத்தில்.. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், `கொரோனில்’ என்ற `கொரோனா கிட்’ ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் யோகா குரு பாபா ராம்தேவ். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கும், அதில் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பும் பதஞ்சலி நிறுவனத்துக்கு பலத்த அடியைக் கொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனம் எனக் கூறும் பதஞ்சலி, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி, மக்களின் அச்சத்தையும் பீதியையும் பயன்படுத்தி மேலும் லாபம் பார்க்க முயற்சிப்பதாகக் கூறி அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். இது அப்போது பெரும் பேசுபொருளாக இருந்தது.

 

கொரோனா தடுப்பு பணிகளின்போது இறந்த முன்களப் பணியாளர்கள், மத்திய அல்லது மாநில அரசில் உள்ள ஏதாவது ஒரு அரசாங்கத்திடமிருந்து மட்டுமே சலுகைகள் மற்றும் இழப்பீடுகளைப் பெறமுடியும் என்றும், இரு அரசுகளிடமும் நிவாரணம் பெறமுடியாது என்றும் உத்தரவு பிறப்பித்தார். அதுபோல, புதுச்சேரி நியாய விலைக் கடைகளில் பொருட்களுக்குப் பதிலாக பணத்தை வழங்குவதற்கான அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் முடிவுக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்தார். OMR விடைத்தாள் முறைகேடு மூலமாக கடந்த 2020 நீட் தேர்வில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை பராமரிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த இரண்டு அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

சமீபத்தில், கரூரின் திருவள்ளுவர் மைதானத்தில் பாஜக மாநாடு நடைபெற்றது. முன்னதாக, இந்த நிகழ்வுக்கு கரூர் மாநகராட்சி அதிகாரிகள் பாஜக கூட்டத்திற்கு அனுமதி மறுத்ததாக கூறி நீதிமன்றத்தை நாடினர். அப்போது இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி அவர், “பாஜக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த கரூர் மாநகராட்சி அதிகாரிகளை கடுமையாக சாடினார். ஒவ்வொரு கட்சியும் இது ஒரு ஜனநாயக நாடு என்று கூறுகிறது. ஆனால், கட்சி ஆட்சிக்கு வந்ததும், மற்ற கட்சியினர் தங்கள் கருத்துக்களை பொதுவெளியில் வெளிப்படுத்துவதைத் தடுக்க அவர்கள் எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால் ஒவ்வொரு தனிநபரும் தாங்கள் வெளிப்படுத்த விரும்புவதைப் பேச அனுமதிக்க வேண்டும். அது ஒரு பொதுக்கூட்டத்திலோ அல்லது வேறு எந்த வகையிலோ இருக்கலாம். கருத்துக்களை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது எனக் கூறியிருந்தார். இதையடுத்து, கரூரில் பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி பல்வேறு வழக்குகளில் அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் இந்த வழக்கு விசாரணை மிகுந்த பரபரப்புடன் உற்று நோக்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

 ரூ.4 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

இந்த நிலையில், நெல்லை சுயேட்சை வேட்பாளர் ராகவன், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24-04-24) நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‘பணம் பறிமுதல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது’ என்று கூறியது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.