
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதைக் கண்டித்து திமுக சார்பில் திண்டுக்கல்சாலை ரோடு நாகல்நகர் மணிக்கூண்டு வழியாக சைக்கிள் பேரணி புறப்பட்டது. இந்தப் பேரணியில் சென்றவர்கள் மீண்டும் திமுக கட்சி அலுவலகம் வந்து சேர்ந்தனர்.
இந்த சைக்கிள் பேரணி தொடங்கிய சிறிது நேரத்திலேயே திடீரென மழை பெய்தது. இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. தொண்டர்கள் கூடியுள்ளனர். ஆகையால் மழை பெய்தாலும் பரவாயில்லை என்று சிலர் கூறியுள்ளனர். மழையையும் பொருட்படுத்தாமல் கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் நனைந்தவாறு சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணியைக் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் துவக்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார். அதன்பின் பத்திரிகையாளரிடம் ஐ.பி.செந்தில் குமார் பேசும்போது, “பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதைக் கண்டிக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் சைக்கிள் பேரணி நடக்கிறது. மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும், இதனால் மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்” என்று கூறினார். இந்தப் பேரணியில் 500க்கும் மேற்பட்ட கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
Follow Us